வில்லன்களிடம் விரல் வித்தை காட்டும் கமல் - அனல் பறக்கும் அதிரடி ஆக்ஷன் Mode-ல் இந்தியன் தாத்தா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 09, 2019 01:20 PM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற அதிரடி ஆக்ஷன் காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கடந்த ஆக.26ம் தேதி முதல் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. வளசரவாக்கத்தில் உள்ள ஆவின் மேங்கோ க்ரூவ் பகுதியில் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டதாகவும், இந்த ஷூட்டிங்கில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் வில்லன்களை கமல்ஹாசன் துவம்சம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’, ‘சிவாஜி’ மற்றும் ‘எந்திரன்: தி ரோபோ’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சண்டை காட்சிகள் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் அடுத்த வாரம் ஆந்திராவில் தொடங்கும் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.