கொரோனா வைரஸ் - இந்த காரணங்களுக்காக பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகலாம்
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்களிடையே கொரோனா பீதி அதிகமாக காணப்படுகிறது. மாஸ்க் அணிய வேண்டும், மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸினால் உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இதுவரை தீர்வு காணப்படாததால் பொது இடங்களுக்கு செல்ல மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் சினிமா உள்ளிட்ட வணிக அமைப்புகள் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸில் லேட்டஸ்டாக உருவாகியிருக்கும் 'நோ டைம் டு டை' (No Time To Die) திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
பொதுவாக ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாவது வழக்கம். கொரோனா பாதிப்பினால் இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்ற எண்ணமே காரணம்.
தற்போது இந்தியாவிலும் கொரோனோ பாதிப்பு இருப்பதால் இந்தியாவிலும் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம் இந்திய மொழி படங்களுக்கும் உலக அளவில் ஏகோபித்த வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கக்கூடும் என்பதால் இந்திய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.