கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, சில செயல்பாடுகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில மாநிலங்களில் மதுபானக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மதுபானக்கடைகள் நேற்று முதல் ( மே 7 ) செயல்படத் துவங்கியுள்ளன. அதன் படி சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை கடைகள் செயல்பட்டது. அப்போது வாடிக்கையாளர்கள் உரிய சமூக விலகலை கடைபிடித்து மதுபானம் வாங்கி சென்றனர். மேலும் சிலர் மது வாங்கும் போது தங்கள் மகிழ்ச்சியை வித்தியாசமாக வெளிப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் முதல் நாளான நேற்று (மே 7) ஒரே நாளில் மதுபானம் விற்பனையான விவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.172 கோடியே 59 லட்சத்திற்கு மது விற்பனை ஆகியுள்ளது. மண்டல வாரியாக மதுரை மண்டலத்தில் ரூ. 46.78 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ. 45.67 கோடியும் சேலம் மண்டலத்தில் ரூ. 41.56 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.28.42 கோடியும், சென்னை மண்டலத்தில் ரூ.10.16 கோடியும் விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன் லைனில் மட்டுமே விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.