Throwback.. நடிகை அசினின் குட்டி தேவதையின் ஓணம் கொண்டாட்டம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 11, 2019 07:19 PM
பிரபல நடிகை அசின் தனது குழந்தை அரினின் புகைப்படத்தை பகிர்ந்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த அசின், உலகநாயகன் கமல்ஹாசன், சூர்யா, விஜய், விக்ரம், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஆமிர்கானுடன் இணைந்து நடித்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அக்.24ம் தேதி அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த அசின், தனது மகளின் முதல் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு மகள் அரின் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகையின் கொண்டாட்டத்தையொட்டி, கடந்த ஆண்டு ஓணத்தின் போது எடுத்த தனது மகள் அரினின் புகைப்படத்தை நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.