சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திருத்தணியில் வைக்கப்பட்ட சூர்யாவின் ராட்சத கட்-அவுட் அகற்றப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் என்ஜிகே. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் திருத்தணி மாவட்டத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட்-அவுட் சூர்யாவிற்கு வைக்கப்பட்டது. சுமார் 215 அடியில் சூர்யாவின் என்.ஜி.கே லுக்கில் ரசிகர்கள் வைத்த கட்-அவுட்டை நகராட்சி அதிகாரிகள் தற்போது அகற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, திருத்தணி சூர்யா ரசிகர் மன்றத்தினரை நாம் தொடர்புக் கொண்ட போது, ‘அது உண்மை தான். முறையாக அனுமதி பெற்ற பிறகே இந்த கட்-அவுட்டை உருவாக்கினோம். என்.ஜி.கே திரைப்படம் வெளியாக அரை நாள் மட்டுமே உள்ள நிலையில், ஒரு சில காரணங்களுக்காக கட்-அவுட்டை நகராட்சி அதிகாரிகள் அகற்றியிருப்பது வருத்தமளிக்கிறது. இதற்காக ரூ.6.5 லட்சம் செலவு செய்திருக்கிறோம். முன்கூட்டியே இதற்கு அனுமதியில்லை என மறுத்திருந்தால் இந்த தொகையை வேறு ஏதேனும் நல்ல காரியத்திற்கு பயன்படுத்தியிருப்போம். இது மிகவும் வருத்தமாக உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலகம் வரை சென்று முறையிடவிருக்கிறோம்’ என தெரிவித்தனர்.