'சொந்த டீம் தோத்தபோதும்'... 'நடராஜனுக்காக சந்தோஷப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்!!!'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்துள்ளபோதும் இந்திய வீரர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக அந்தத் தொடரில் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய நிலையில் சிறப்பாக விளையாடிய நடராஜன் ஹைதராபாத் அணிக்கு வலு சேர்த்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வலைப் பயிற்சியில் பந்து வீசுவதற்காக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டு பின், டி20 அணியில் காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி இடம்பெற முடியாததால் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் நடராஜன் விளையாடினார். அதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியாவே, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என வாழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் நடராஜன் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரரும், சன்ரைஸர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், "தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்துவிட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர். வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை. வாழ்த்துக்கள்" எனக் கூறி நெகிழ வைத்துள்ளார். அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
