நடிகை மரணமடைந்த விவகாரம்.. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸ்.. வெளிச்சத்துக்கு வந்த மர்மம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகையும் தேசிய கட்சி பிரமுகருமான சோனாலி போகட் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சோனாலி போகட்
ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட், தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சோனாலி போகட், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 ஆவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார் சோனாலி. அது மட்டுமில்லாமல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
அதிர்ச்சி
41 வயதான சோனாலி சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே, நேற்று சோனாலியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, கோவா மாநில காவல்துறையினர் சோனாலியின் உதவியாளராக இருந்த சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகிய இருவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
சிசிடிவி
இதனிடையே, சோனாலி போகட் சென்ற ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய கோவா மாநில காவல்துறை அதிகாரியான ஓம் வீர் சிங் பிஷ்னாய்,"சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி இருவரும் சோனாலிக்கு பானத்தில் ரசாயன மருந்தை கலந்து கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு சோனாலியை இருவரும் அழைத்துச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும் அந்த ரசாயனம் என்ன என்பது இன்னும் புலனாகவில்லை. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
சோனாலி போகட் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், காவல்துறையினர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.