உலகின் 800 வது கோடி குழந்தை.. பிறந்தது எங்கே?.. பெயர் என்ன?? இணையத்தில் வைரலாகும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 800 வது கோடியாக பிறந்த குழந்தை குறித்த செய்தி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சமகால சூழலில் உலகின் பல நாடுகள் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும், 2080 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் ஐநா கணித்திருக்கிறது.
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. அதனுடன் இந்த நிலையை ஒப்பிடும்போது, உலக மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் கருவுறுதலில் ஏற்பட்ட சரிவு காரணமாக 2050 ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகை சதவீதம் 0.5 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என ஐநா தெரிவித்திருக்கிறது.
மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்து தான் வரபோகிறது என்றும் ஐநா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் இருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், உலகின் 800 வது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 800 வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பிறந்துள்ளது. மணிலா அருகேயுள்ள டாண்டோ என்னும் கிராமத்தில் 800 வது கோடி குழந்தை பிறந்தது. பெண் குழந்தையான இதற்கு Vinis Mabansag என பெயர் சூட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனை பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொண்டாடி வரும் நிலையில், அந்த குழந்தை மற்றும் தாயின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளது.