ஆன்லைனில் 'உணவு' ஆர்டர் செய்த 'சிறுமி'... ஒரே ஒரு ஆர்டருக்காக... 'வீட்டு' வாசலில் வந்து நின்ற '40'க்கும் மேற்பட்ட 'ஊழியர்'கள்... நடந்தது என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய கால கட்டத்தில் உலகளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாக உள்ளனர்.

அதே போல, தினந்தோறும் உணவு பொருட்களை கூட நேரடியாக கடைக்குச் செல்லாமல், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தே உணவு உண்ணும் பழக்கம் உலகளவில் பலரிடம் உள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 7 வயது சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் உணவு பொருளை ஆர்டர் செய்த நிலையில், சுமார் 40 பேர் அதே உணவுடன் சிறுமியின் வீட்டை ஒரே நேரத்தில் வந்தடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு என்னும் பகுதியில் இணையதள வசதி மெதுவாகவும், சில நேரத்தில் சுத்தமாக கிடைக்காமலும் இருக்கும். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரின் மொபைல் போனில் இருந்து ஃபுட் பாண்டா (FoodPanda) செயலி மூலம் தனது உணவை ஆர்டர் செய்துள்ளார். அப்போது நெட் வேகம் மெதுவாக இருந்ததால், ஆர்டர் ஆகவில்லை என சிறுமி மீண்டும் மீண்டும் ஆர்டர் பட்டனை அழுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, அவரது ஒரே ஆர்டர் நாற்பதுக்கும் அதிகமாக பதிவாக, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சிறுமி இருந்த தெருவில் சுமார் 40 க்கும் அதிகமான உணவு டெலிவரி ஊழியர்கள் அப்பகுதியை சூழ்ந்துள்ளனர். இதனையறிந்த அந்த சிறுமி அழ ஆரம்பித்துள்ளார். தான் தவறுதலாக அப்படி செய்ததை அவர் தெரிவித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து சிறுமி ஆர்டர் செய்த உணவு பொருட்களை வாங்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அப்பகுதியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
