"அமெரிக்கா TO சென்னை.." 26 மணி நேர பயணம்.. மூதாட்டிக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பறந்த தனி விமானம்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்இதய நோயால் பாதிக்கப்பட்ட 67 வது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தடைந்த செய்தி, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் போர்ட்லேண்டு பகுதியில், 67 வயதான இந்திய பெண் ஒருவர், இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது சற்று அதிகமாக இதய நோய் பாதிப்பு ஏற்படவே, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு அவரை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து சென்னை வரை, அந்த பெண்ணை விமானத்தின் மூலம் கொண்டு வந்துள்ளனர். மொத்தம் 26 மணி நேரம் செலவு செய்து அந்த பெண்ணை சென்னை கொண்டு சேர்த்துள்ளனர். மருத்துவ வசதிக்காக ஒருவரை விமானம் மூலம் அதிக தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல் முறை. அமெரிக்காவின் ஓரிகோன் பகுதியில் தங்கி இருந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த விமான பயணத்திற்காக அந்த பெண்ணின் குடும்பம் சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் டாலர்கள், (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடிக்கு மேல்) செலவு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ICATT எனப்படும் விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர். போர்ட்லாந்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல்லிற்கும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் என இரண்டு தனி விமானங்கள் மூலம் அந்த பெண் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். முதல் தனியார் ஜெட் விமானத்தில், மொத்தம் மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு துணை மருத்துவர்கள் உட்பட ஒரு மருத்துவ குழு அந்த பெண்ணுடன் வந்துள்ளனர்.
முன்னதாக, போர்ட்லேண்டிலிருந்து ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் விமான நிலையத்திற்கு செல்ல ஏழரை மணிநேரம் ஆனது. இதன் பின்னர், அங்கே எரிபொருள் நிரப்பிய பிறகு, துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரங்கி இறங்கி இருந்தது. அங்கிருந்து மருத்துவர்களும், விமான பணியாளர்களும் மாற்றப்பட்டு, பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், அமெரிக்காவில் இருந்து விமானப் பயணம் முழுவதும் நோயாளியை கண்காணித்து வந்தார்.
இதையடுத்து, சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த விமானம் தரையிறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அங்கிருந்து உடனடியாக ஆம்புலன்ஸில் மாற்றப்பட்டு, மருத்துவமனைக்கும் அந்த பெண் நோயாளி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதாகவும் வந்ததாகவும் தகவல் குறிப்பிடுகின்றது.
அமெரிக்காவில் சிகிச்சை காலம் அதிகமாக இருப்பதாகவும், நோயாளியை விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரும் செலவை விட அதிக செலவாகும் என்பதால், இந்த முடிவை எடுத்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் உடல்நல காப்பீடு பெறுவதிலும் சிரமம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.