என்னங்க இது.. வானவில் கலர்ல இருக்கு.?.. இதுவரையும் புளூட்டோவை இப்படி யாருமே பார்த்திருக்க மாட்டாங்க.. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரிய குடும்பத்தில் உள்ள புளூட்டோவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புளூட்டோ
சூரிய குடும்பத்தில் கிரகங்கள் தவிர்த்து ஏராளமான குறுங்கோள்கள், விண்கற்கள் இருக்கின்றன. இதுகுறித்த ஆராய்ச்சி தொடர்ந்து உலக நாடுகளால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது புளூட்டோ என்னும் கிரகம். இதனையடுத்து சூரிய குடும்பத்தில் உள்ள 9வது கிரகமாக புளூட்டோ அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு புளூட்டோவிற்கு அருகே அதே மாதிரி பிற குறுங்கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் 1990 களில் புளூட்டோவை குறுங்கோளாக அங்கீகரிக்க வேண்டும் என சர்வதேச விண்வெளி கூட்டமைப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 2019 ஆம் ஆண்டு புளூட்டோ ஒரு குள்ள கிரகமாக (dwarf planet) அங்கீகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, நெப்டியூனுக்கு அடுத்திருக்கும் பகுதி குய்ப்பர் பெல்ட் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், புளூட்டோ குறித்த ஆய்வுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா முன்னெடுத்து வருகிறது.
நியூ ஹரிஸான்ஸ்
இந்நிலையில், புளூட்டோவை ஆராய கடந்த 2006 ஆம் ஆண்டு நாசா நியூ ஹரிஸான்ஸ் என்னும் விண்கலத்தை ஏவியது. ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதன்படி 2015 ஆம் ஆண்டு புளூட்டோவின் கோடை காலத்தில் இந்த விண்கலம் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதன்மூலம், கோடை காலத்தில் புளூட்டோவின் தட்பவெட்ப நிலை, புவியியல் அமைப்பு ஆகியவை குறித்து பல தகவல்களை திரட்டியது நாசா. இந்நிலையில், புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. இதுதான் அப்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாக பேசப்பட்டு வருகிறது.
வானவில் வண்ணம்
தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தில் புளூட்டோ வானவில் நிறத்தில் ஜொலிக்கிறது. இது 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனவும் புளூட்டோவின் பல்வேறு பகுதிகளுக்கிடையே உள்ள வண்ண வேறுபாட்டை எளிதில் அடையாளப்படுத்தும் நோக்கில் ஆராய்ச்சியாளர்களால் இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த புகைப்படத்தினை இதுவரையில் 7.8 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.