"எங்க அப்பா சாகுறதுக்கு முன்னாடி எழுதுன LETTER இது.." 9 வருஷம் கழிச்சு தெரிஞ்ச 'உண்மை'.. "புள்ளைங்க கையில் கிடைக்கும்னு தெரிஞ்சே எழுதி இருக்காரு"
முகப்பு > செய்திகள் > உலகம்நமக்கு மிகவும் நெருக்கமான நபர்கள் யாரவது திடீரென உயிரிழந்து சென்றால், அந்த வேதனை மாறவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
ஆண்டுகள் கழிந்து போனால் கூட, அவர்களின் நினைவுகள் எப்போதும் நம்முடன் தான் இருக்கும். அந்த இடத்தை நிரப்புவது கூட, மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும்.
அப்படி இருக்கும் போது, அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பாக, தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ஏதாவது கடிதம் எழுதி வைத்து விட்டு, அது பல ஆண்டுகளுக்கு பிறகு, உரியவர் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம் தான், Amy Clukey என்ற பெண் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. இவரது தந்தையான ரிக் என்பவர், கடந்த 2013 ஆம் ஆண்டு, நுரையீரல் புற்றுநோய் காரணமாக 53 வயதில் உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள். அதில் மூத்தவர் தான் எமி. முன்னதாக, தேனீ வளர்க்கும் வேலையிலும் ரிக் ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து, அவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், அவரது தேனீ வளர்க்கும் கருவிகளை எமியின் சகோதரர் எடுத்துள்ளார். அதில், தந்தை ரிக் எழுதிய கடிதம் ஒன்று இருப்பது கண்டு, இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை எமியிடம் அவர் காட்ட, அதில் இருந்த விஷயம், ரிக்கின் பிள்ளைகள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு, ரிக் உயிரிழந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கடிதத்தை அவர் எழுதியதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், "தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள எனது பிள்ளைகளில் ஒருவரிடம் இந்த கடிதம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். தேனீ வளர்ப்பு என்பது எளிமையானது. உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற விஷயங்களை ஆன்லைன் மூலம் கூட நீங்கள் கற்றுக் கொள்ளலாம். தேனீக்கள் தேனை விட அதிக பொருட்களை உருவாக்குகின்றன. கிடைக்கும் நேரத்தில் இந்த வேலையே செய்தாலே, கூடுதல் வருமானத்தை இது பெற்று தரும்" என அந்த கடிதத்தில் ரிக் எழுதி வைத்துள்ளார்.
புற்றுநோய் வந்து இறப்பதற்கு முன்பாக, தனது தொழிலாக இருந்த தேனீ வளர்ப்பு, தன்னுடைய பிள்ளைகளிடம் போய் சேர வேண்டும் என்ற நோக்கில், ரிக் எழுதி வைத்த இந்த கடிதம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், 9 ஆண்டுகளுக்கு பிறகு கடிதம் கிடைத்துள்ள விஷயமும், பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, எமியின் சகோதரி ஒருவர், வீடு வாங்கிய பின், தந்தையின் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட போவதாக தெரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.