‘இத்தன் வருஷமா செவ்வாய் கிழமை மட்டும் நடக்கும் அமெரிக்க தேர்தல்!’.. ‘இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சுவாரஸ்ய கதை இருக்கா?’
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல்கள், 1845-ம் ஆண்டுக்கு முன்னர் வரை ஏதோ ஒரு நாளில்தான் நடத்தப்பட்டுவந்தன. ஆனால், 1845-ம் ஆண்டு தீர்மானத்தின்படி, அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அனைத்தும் நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில் நடத்தப்பட்டுவருகின்றன. அதென்ன முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை என்பது இங்கிருக்கும் பெரிய கேள்வி. அதுவும் முதல் செவ்வாய்க்கிழமை என்று கூட சொல்லாமல், முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை என்று சொல்கிறார்களே? என்று தோன்றலாம்.
அதற்குள் தான் அந்த சுவாரஸ்ய வரலாறு பொதிந்து. ஒருவேளை நவம்பர் மாதத்தின் முதல் நாளே செவ்வாய்க்கிழமையாக இருந்தால் அன்று தேர்தல் நடத்தப்பட மாட்டாது. காரணம், நவம்பர் 1-ம் தேதியை கிறிஸ்தவர்கள், சகல பரிசுத்தவான்கள் தினம் (All Saint's Day) என்கிற பெயரில் அனுசரிப்பதுதான். அத்துடன் நவம்பர் மாதம்தான் அறுவடை முடிந்து அப்போதைய அமெரிக்க விவசாயிகளுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்.
எனவே அதிக வெயிலும் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் இருக்கும் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தலை நடத்தலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. சரி, ஏன் செவ்வாய்க்கிழமை? அதுதான் கதையில் மெயினான இடம். அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள்வழக்கப்படி சனி, ஞாயிற்றுக் கிழமைகளை ஓய்வெடுப்பதற்கும் வழிபடுவதற்கும் பயன்படுத்துவதன் காரணமாக அந்த இரண்டு கிழமைகள் சாத்தியம் இல்லை. புதன் கிழமைகளில் அமெரிக்காவிலுள்ள பகுதிகளிலும் சந்தைகள் நடைபெற்று வந்ததால், அந்த நாளிலும் தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டது.
அந்த காலத்தில் போக்குவரத்து வசதிகளும் அவ்வளவாக இல்லை என்பதால், பயணம் செய்து வந்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வந்து போனால், திரும்பிச் செல்லவே ஒரு நாளாகும். எனவே ஞாயிறு வழிபாடு காரணமாகவும், புதன்கிழமை சந்தைக என்பதாலும், பயணம் செய்ய முடியாது என்பதால் திங்கள், வியாழன்ஆகிய நாட்கள் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தன.
ஆனால், பயணம் செய்வதற்கு திங்கட்கிழமை ஏதுவாக இருக்கும் என்பதால், செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டு, இந்த பாரம்பர்ய முறையை இன்றுவரை கைவிடாமல் அமெரிக்கா பின்பற்றிவருகிறது. இதேபோல் அதிபர் பதவியேற்பதற்கான தேதிக்கும் சில விதிகள் உள்ளன. தேர்தல் நடைபெற்ற அதே நாளின் இரவிலோ அல்லது அதற்கடுத்த நாளிலோ அதிபர் யார் என்பது தெரிந்துவிடும் என்றாலும், ஜனவரி 20-ம் தேதிதான் அதிபருக்கான பொறுப்புகளை வெற்றிபெற்றவர் வெள்ளை மாளிகைக்குள் செல்ல முடியும்.