5ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவைக்கு பாதிப்பா..? நிறுவனங்கள் பரபரப்பு புகார்..!
முகப்பு > செய்திகள் > உலகம்5ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் 5ஜி இணையசேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி தொழில்நுட்பத்தால் விமானத்தின் அதிநவீன நுண்ணுணர்வு பாதுகாப்பு கருவிகளுக்கு சேதம் ஏற்படலாம் என்றும், தரையிறங்கும் முறைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் விமான நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் புகார் தெரிவித்துள்ளன.
5ஜி தொழில் நுட்பத்தால் விமான பயணிகள், சரக்கு ஏற்றுமதி மற்றும் மருத்துவ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விமான நிறுவனங்கள் கூறியுள்ளன. அதனால் விமான ஓடுபாதைகளின் அருகே உள்ள 5ஜி சிக்னல்கள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5ஜி தொழில்நுட்ப சேவை வழங்கும் ஏடி&டி மற்றும் வெரிஸோன் ஆகிய நிறுவனங்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து விமான ஓடுபாதைகளுக்கு அருகே உள்ள 5ஜி செல்போன் டவர்களை இயக்காமல் நிறுத்தி வைக்க அந்நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 5ஜி இணையசேவை அமெரிக்காவில் நடைமுறைக்கு வருவதால், அந்நாட்டில் இயக்கப்படும் விமான சேவை குறைக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19.01.2022) முதல் அமெரிக்காவில் சில விமான இயக்கம் நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.