விவாகரத்துக்கே காரணமான ‘இளவரசி’ டயானாவின் விவகாரமான பேட்டி?.. வெளியான அதிரடி உத்தரவு!.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றுசேர்ந்த 'வில்லியம் மற்றும் ஹாரி!'
முகப்பு > செய்திகள் > உலகம்தன் முதல் மனைவி இளவரசி டயானாவிடம் இருந்து 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், இளவரசர் சார்லஸ் (72) விவாகரத்து பெற்றார்.
முன்னதாக, அதே ஆண்டு, பி.பி.சி., தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பனோரமா' என்ற நிகழ்ச்சிக்கு, டயானா அளித்த, அரச குடும்பத்தை அதிரவைத்த பேட்டி ஒன்றுதான் இந்த விவாகரத்து விவகாரத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. நேரலையில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர், பார்த்த அந்த பேட்டியை பத்திரிகையாளர் மார்ட்டின் பாஷிர் எடுத்த நிலையில், இளவரசர் சார்லசுக்கும், அவரது தற்போதைய மனைவியான கமிலா பார்க்கருக்கும் இடையிலான உறவு குறித்து, அப்போது டயானா வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஆனால் பேட்டியை எடுத்த பத்திரிகையாளர் பாஷிர், போலி ஆவணங்களை காண்பித்தும், டயானாவுக்கு அழுத்தம் கொடுத்தும், அந்த பேட்டியை எடுத்ததாக, டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், அண்மையில் குற்றம் சாட்டியதை அடுத்து, அதற்கான ஆதாரங்கள், பி.பி.சி. நிறுவனத்திற்கு கிடைத்தன. இதனால் பி.பி.சி.நிறுவனமோ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணை உத்தரவுக்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் டைசன் தலைமையிலான குழு, அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் தங்களது தாயின் சர்ச்சைக்குரிய அந்த பேட்டி தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலதரப்பட்ட விவகாரங்களால் முரண்பட்டு உரசிக் கொண்டிருக்கும் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் இந்த விஷயத்தில் போடப்பட்டுள்ள உத்தரவை இணைந்து வரவேற்றுள்ளனர்.