‘இரண்டு சீனியர் வீரர்களும்’... ‘டெஸ்ட் தொடரில் பங்கேற்க போவதில்லை?’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா இருவரும், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த கையோடு, இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க அங்கு சென்றது. அங்கு இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காயம் காரணமாக சில வீரர்கள் ஆஸ்திரேலியா செல்லவில்லை.
இந்நிலையில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் போது, இடது காலில் காயம் அடைந்து தசைப்பிடிப்பு மோசமாக இருந்ததால் சில போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் இருந்தார். அவர் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் மீண்டு விடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கியது பிசிசிஐ.
பின் அவர் ஐபிஎல் தொடரில் போட்டிகளில் ஆடியதை அடுத்து வேறு வழியின்றி அவரை டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ. அவர் 70 சதவீத உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ கூறியது. டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள அவரை உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என காரணம் காட்டி, துபாயில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது பிசிசிஐ. அங்கே அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஆஸ்திரேலியா செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
இதற்கிடையில், ரோகித் சர்மா கடந்த சில நாட்கள் முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தயார் ஆகி விட்டார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியாவில் உடற்தகுதி தேர்வை நிரூபிக்காமல் இருக்கும் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஆஸ்திரேலியா வரவில்லை என்றால் டெஸ்ட் தொடரில் ஆட முடியாது என கூறினார்.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமி இன்னும் அவர்கள் ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. அவர்கள் இதுபற்றி இந்திய அணி நிர்வாகத்திடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால், ரோகித் சர்மா, அடுத்த 4 நாட்களுக்குள் ஆஸ்திரேலியா செல்வது சாத்தியம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதேபோல், இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் பாதியிலேயே காயம் காரணமாக விலகி இருந்தார். அவர் அப்போது முதலே உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரும் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவரையும் அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேண்டுமேன்றே சீனியர் வீரர்களை இந்திய அணி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கட்டம் கட்டி வருவதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.