கொரோனா 'தடுப்பூசி'க்கு உலகிலேயே அனுமதி வழங்கிய 'முதல்' நாடு!!!... அடுத்த 'வாரம்' முதல் மக்களுக்கு 'விநியோகம்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் கடந்த ஓராண்டாக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்த கொடிய தொற்றின் காரணமாக, உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டி, பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் உள்ளன. இதில், சில நாடுகளில் சோதனை இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் (Pfizer - Biontech) ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. இதன் மூலம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாகிறது பிரிட்டன்.
இந்த தடுப்பூசி மருந்து, செலுத்தப்பட்ட 95 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பாதுகாப்பானது என பிரிட்டன் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல், பிரிட்டனில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களை சேர்ந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது ஆரம்பிக்கப்படவுள்ளது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவுள்ள இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை ஏற்கனவே பிரிட்டன் அரசு ஆர்டர் செய்துள்ளது. வழக்கமாக, தடுப்பூசி ஒன்று ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாட்டுக்கு வர கொஞ்ச காலம் தேவைப்படும். ஆனால், உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் மிகவும் குறைவான காலத்தில், அதாவது 10 மாத காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி இது தான்.