'பதவிக்காலம் முடிவடைவதற்குள்'... 'டிரம்ப் போட்டு வைத்திருந்த பெரிய திட்டம்'... குறுக்கே நின்ற அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டுவைத்திருந்த திட்டம் தற்போது வெளிவந்துள்ளது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருக்கும் போது 2015ல் ஈரான் பி5+1 எனப்படும் உலக வல்லரசுகள் அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்குப் பதில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் டிரம்ப் பதவி ஏற்றதும் 2018 ஆம் ஆண்டு 2015ம் ஆண்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி ஈரான் மற்றும் ஈரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உறவு மோசமான நிலைக்குச் சென்றது. அதனைத்தொடர்ந்து 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த 6 எண்ணெய் டேங்கர்கள் ஓமன் வளைகுடாவில் வெடித்துச் சிதறின.
இதற்கு அமெரிக்கா ஈரானைக் குற்றம் சுமத்தியது. பிறகு ஜூன் 20 அன்று ஹார்மஸ் நீரிணைக்கு மேல் ஒர் அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ஈரான். இந்த பிரச்சனைகள் ஒரு புறம் நடக்க, சமீபத்தில் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திலிருந்து காரில் சென்ற ஈரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவது குறித்து மூத்த ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்டு உள்ளார். ஆனால் டிரம்பின் ஆலோசகர்கள் அப்படி ஒரு தாக்குதலை நடத்தினால் அது ஈரானுடன் ஒரு பெரிய போருக்கு வழி வகுக்கும் என எச்சரித்து உள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்குத் திரும்புவதற்கான பிடனின் நோக்கம் காரணமாகப் பதவியேற்பு தினத்திற்கு முன்னர் ஈரானுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் பதிலடி கொடுக்க வேண்டுமா? என்று ஆலோசகர்கள் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
