‘சிறுவனின் மண்டை ஓட்டில் இருந்த பல்’... 'காரணத்தைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Sep 24, 2019 03:58 PM
14 வயது சிறுவனின் மண்டை ஓட்டிலிருந்து, பல் ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான 14 வயது சிறுவன் ஒருவன், மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தன்னுடன் விளையாடிய மற்றொரு சிறுவன் மீது மோதிக் கொண்டான். இதில் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்குத் தையல் போட்ட நிலையில், 5 நாட்கள் கழித்து சிறுவனுக்கு காய்ச்சல் வந்துள்ளது. மேலும் தலையில் கூர்மையான வலி தோன்றியுள்ளது. அதன்பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிறுவன் சென்றான்.
அப்போது, காயம் சுத்தம் செய்யப்பட்டு, ஆன்டி பயாடிக் கொடுத்து சிறுவனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். 24 மணிநேரத்தில் திரும்பியும் காய்ச்சல் வந்ததுடன், காயம் வீங்கி சீல் வடியத் தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனை சென்றபோது, மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார். இவ்வாறாக 12 நாட்கள் ஆனது. பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, சிறுவனுக்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
அதில், மண்டை ஓட்டில் கால்சியம் கட்டி அல்லது உலோகம் போன்றதொரு பொருள் சிக்கியிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினர். பின்னர் அது என்னவென்று தெரிய வந்ததையடுத்து மருத்துவர்கள் அதிர்ச்சியாயினர். மைதானத்தில் விளையாடியபோது, அந்த சிறுவனின் மீது மோதிய மற்றொரு சிறுவனின் பல் தான் அது என்று. அதை அப்படியே விட்டிருந்தால் நோய்த் தொற்று அதிகரித்து கோமா ஏற்பட்டு, உயிரிழப்பும் நேர்ந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிகிச்சை முடிந்ததும், 2 நாட்கள் கழித்து சிறுவன் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.