'எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வந்தாலும்... இவங்க சண்டையால'... 'டிக்டாக்'-இன் மர்ம பக்கங்கள்... 37 வயதில் சாதித்த டிக்டாக் அதிபர் சாங் யிமிங்!
முகப்பு > செய்திகள் > உலகம்டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் வியக்கத்தகு வளர்ச்சி பெற்றது. சீனாவிலிருந்து தோன்றி உலகளவில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் இணைய நிறுவனம் இது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலிக்கு 80 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.

குறுகிய காலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி பெற்ற டிக்டாக்-இன் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் தலைவர், சாங் யிமிங். இளம் தொழில் முனைவோரான சாங் யிமிங்கிக்கு 37 வயதுதான் ஆகிறது. சீன கம்யூம்னிஸ்ட் அரசின் தணிக்கைகள் மற்றும் இறுக்கமான இணையக் கட்டுப்பாடுகளில் சிக்காதபடி, சீனாவைத் தவிர்த்து உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் டிக்டாக் எனும் வீடியோ செயலியை உருவாக்கினார். அதாவது பைட் டான்ஸ் எனும் தாய் நிறுவனம் மூலம் சீனாவில் மட்டும் இயங்கும் வகையில் ஒரு செயலி; சீனாவைத் தவிர்த்த உலகமெங்கும் இயங்கும் வகையில் மற்றொரு செயலி என்று புத்திசாலித்தனத்துடன் தனது முதல் அடியை முன்வைத்தார்.
செயலிகளைப் பயன்படுத்துவோர் குறித்த தரவுகள் அனைத்தையும் சிங்கப்பூரிலும், விர்ஜீனியாவிலும் சேமித்து வைத்தார். சீனாவைச் சேர்ந்த நிறுவனமான பைட் டான்ஸ் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படும் எனும் பரப்புரைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பணியாளர்களையும் மேலாளர்களையும் அமெரிக்காவிலிருந்தே தேர்ந்தெடுத்தார்.
இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் கடைசியில் டிக்டாக் நிறுவனம் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டுவிட்டது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக்டாக்கை ஏதாவதொரு அமெரிக்க கம்பெனிக்கு விற்றுவிடவேண்டும்; இல்லையேல் நிரந்தரமாகத் தடைவிதிப்போம் என்று பகிரங்கமாகவே மிரட்டியுள்ளார். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், கடும் அழுத்தம் கொடுத்து டிக்டாக்கை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முயன்று வருகிறது. பைட் டான்ஸ் நிறுவனர் சாங் யிமிங் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தும் அவர் சிக்கிக்கொண்டுள்ள சம்பவம் பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் காரணம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தான் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
'சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஸீ ஜின்பிங் தான், சீன மக்கள் மற்றும் சீன நிறுவனங்கள் அனைத்துக்கும் இறுதி அதிகாரம் மிக்கவர்' என்ற அரசியல் அமைப்பு வழங்கிய அதிகாரம் தான் இத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணமாகியுள்ளது. இந்த அதிகாரம் மூலம் ஸீ ஜின்பிங் சீனாவைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தரவுகளை வேண்டுமானாலும் பெற முடியும். சீன நிறுவனங்கள் மூலம் உளவு வேலைகளிலும் ஈடுபட முடியும். இதுதான் டிக் டாக் நிறுவனத்துக்கு முக்கிய பிரச்னையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக பைட் டான்ஸ் நிறுவனம் செய்திகளைச் சேகரித்துத் தரும் 'டோடியோ' எனும் செயலியை சீனாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், அதில் வெளியான சீன அதிபருக்கு எதிரான சில சர்ச்சைக்குரிய கருத்துகளால் குறுகிய காலம் முடக்கப்பட்டது. அதன் பிறகு, டோடியோ செயலியில் சீன அதிபர் ஜீ ஜின்பங் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து முதன்மையாக வரும்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
