"ஒருகாலத்துல வறுமைல இருந்தாரு.. ஆனா இப்போ".. காபி லேம்-ன் மேனேஜர் சொல்லிய தகவல்.. சிரிக்க வைக்கும் மனிதனின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் பிரபலமான நபராக அறியப்படும் காபி லேம்-ன் வருமானம் குறித்து அவருடைய மேனேஜர் பேசியிருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

இணையம் மனித குலத்திற்கு பல கொடைகளை அளித்திருக்கிறது. நொடிப்பொழுதில் உலக செய்திகளை நாம் அறிந்துகொள்ள இணையம் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதுவே, சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் அஸ்திவாரம் போட்டது. பெருகிவிட்ட இணைய புழக்கம் காரணமாக சாதாரண மனிதர்களும் தங்களது திறமைகளை உலகறிய செய்ய வாய்ப்பு கிடைத்துவருகிறது. சொல்லப்போனால் பலரது வாழ்க்கையையே சமூக வலை தளங்கள் மாற்றியிருக்கிறது. அவர்களுள் ஒருவர்தான் காபி லேம்.
சிரிக்க வைக்கும் கலைஞர்
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது செனகல் நாடு. அங்கே வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் காபி லேம். இவருடைய சிறு வயதிலேயே குடும்பம் இத்தாலிக்கு குடியேறியது. அங்கேயே படித்து வளர்ந்த லேம், சிஎன்சி ஆப்பரேட்டராக பணியில் சேர்ந்தார். ஆனால், அது வெகுநாள் நீடிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்தபோது, காபி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது விளையாட்டாக டிக்டாக்-ல் பக்கம் ஒன்றை துவங்கியுள்ளார். ஆனால், அதுவே தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
நம்பர் 1
இன்றைய தேதியில் டிக்டாக் பக்கத்தில் அதிகமான மக்களால் பின்தொடரப்படும் நபராக காபி இருக்கிறார். அவரை 149.5 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்துவருகிறார்கள். வேடிக்கையான வீடியோக்களுக்கு பெயர்போன இவருக்கு சோகமான பின்னணியும் இருந்திருக்கிறது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய இவருடைய மேனேஜர் அலெஸாண்ட்ரோ ரிஜியோ,"ஒரு காலத்தில் அவர் வறுமையில் இருந்திருக்கிறார். இப்போது அவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதே அவருக்கு தெரியாது" என்றார்.
சொத்து
மேலும், காபியின் சொத்துமதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கிவிட்டதாகவும், கடைசியாக ஹியூகோ பாஸ் நிறுவனத்திற்காக காபி வெளியிட்ட வீடியோவுக்கு 450,000 டாலர் தொகை வழங்கப்பட்டதாகவும் ரிஜியோ குறிப்பிட்டார். அதேபோல, ஹாலிவுட்டின் பிரபல ஸ்டூடியோ ஒன்று காபியின் ஒரு வீடியோவிற்கு 750,000 டாலர்கள் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
இருப்பினும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், பணத்தினை எப்போதுமே பெரிதாக நினைக்கவில்லை எனவும் காபி பலமுறை பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்,காபியின் வருமானம் குறித்து அவருடய மேனேஜர் பேசியிருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
