"என் குழந்தைக்கு வைத்தியம் பாருங்க".. குட்டியுடன் கிளீனிக்குக்கு வந்த குரங்கு.. டாக்டர் காட்டிய பாசம்..நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் காயம்பட்ட குரங்கு ஒன்று தனது குட்டியுடன் கிளீனிக்கிற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐந்தறிவு கொண்டவை என பொதுவாக விலங்குகளை நாம் குறிப்பிட்டாலும் சில நேரங்களில் அவை புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்பவை. அன்றாடம் தங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகள், வாடிக்கையான இடங்கள் ஆகியவற்றை உன்னிப்பாக விலங்குகள் தங்களது நினைவில் தேக்கிக்கொள்ளும் இயல்புகொண்டவை. அப்படி, காயமடைந்த குரங்கு ஓன்று தனது குட்டியுடன் மருத்துவர் ஒருவருடைய கிளீனிக்கிற்கு வந்து, மருத்துவம் பார்க்கும்படி டாக்டரிடம் கோரிக்கை வைப்பதுபோல அமர்ந்திருந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
திகைத்த டாக்டர்
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அகமது. இவர் சாசராம் பகுதியில் கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, டாக்டர் அகமது தனது கிளீனிக்கில் இருந்தபோது ஒரு தாய் குரங்கு தனது குட்டியை சுமந்தபடி உள்ளே நுழைந்திருக்கிறது. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து, அதனை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், குரங்கின் உடலில் காயங்களை கண்ட மருத்துவர், மக்களை சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அருகே வரும்படி குரங்கிற்கு சைகை காட்டியுள்ளார் மருத்துவர் அகமது. அதனை புரிந்துகொண்ட குரங்கும் உள்ளே சென்று டாக்டரின் அருகே அமர்ந்துள்ளது. இதனை கண்ட அங்கிருந்த மக்கள் அனைவரும் வியப்படைந்திருக்கின்றனர்.
மருத்துவம்
அதைத் தொடர்ந்து, தாய் குரங்கின் தலையில் தழும்பு இருந்ததையும், குட்டியின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததையும் அகமது கவனித்திருக்கிறார். மேலும், காயத்தினை சுத்தம் செய்ய மருத்துவரை அனுமதித்திருக்கிறது அந்த தாய் குரங்கு. தொடர்ந்து, தாய் மற்றும் குட்டிக்கு தலா ஒரு ஊசி போட்ட மருத்துவர் அகமது, காயத்தை ஆற்றும் ஆயின்மென்ட்டை குட்டியின் காலில் இருந்த காயத்தின் மீது தடவியுள்ளார்.
சிகிச்சையை முடித்த பின்னர், பாதையில் நின்றிருந்த மக்களை வழிவிடும்படியும் அப்போதுதான் குரங்கு பயமில்லாமல் வெளியே செல்ல முடியும் எனக் கூறியுள்ளார். வெளியே நின்றிருந்த மக்களும் ஒதுங்கி நிற்க, குரங்கு தனது குட்டியுடன் அங்கிருந்து வெளியே சென்றிருக்கிறது. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட, இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
सासाराम में जब एक बंदर अपने बच्चे के साथ खुद का इलाज़ करवाने पहुंचा निजी अस्पताल। इलाज़ करने वाले डॉक्टर एस एम अहमद खुद को सौभाग्यशाली समझ रहे है की हनुमान जी खुद चलकर इनके पास पहुंचे pic.twitter.com/0NPrAtV6NU
— rajeshkumarojha (@rajeshrepoter) June 8, 2022