தெருவில் 'நாயுடன்' வாக்கிங் சென்றால் 'தண்டனை'!.. சீனாவில் வெளியான 'அதிர்ச்சி' உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் யுன்னான் மாகாணம் மக்கள் தங்கள் செல்லப்பிராணியான நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ளது.
தெருவில் 3 முறை நாயுடன் உரிமையாளர் பிடிபட்டால் 3வது முறைக்குப் பிறகு, அந்த நாய் கொல்லப்படும்.என்றும், நவம்பர் 20-ம் தேதி முதல் இந்த விதி செயல்படுத்தப்படும் என்றும் சீனா அறிவித்துள்ள அறிவிப்பு யுன்னான் மக்களிடையே கடும் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது. உரிமையாளருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நாய்கள் தெருவில் செல்வோரைக் கடிப்பதாகப் புகார்கள் எழுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
உரிமையாளர் தன் நாயுடன் முதல் தடவை தெருவில் பிடிபட்டால் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால், அந்த நாட்டுப் பண மதிப்பில் ஐம்பது முதல் இருநூறு யுவான், அதாவது ஏழு முதல் முப்பது டாலர்வரை அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதேபோன்ற நிகழ்ந்தால் உரிமையாளரிடமிருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லப்படும் என்று யுன்னான் மாகாணம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மக்களோ, 'நாய் வளர்ப்போருக்கு எதிரான இந்தச் சட்டம் காட்டுமிராண்டித்தனமானது' என்று பொங்கியுள்ளனர் சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து சிங்கப்பூரிலுள்ள விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பின் தலைவரான ஜெய்ப்பால் சிங் கில், கவலை தெரிவித்திருக்கிறார். வளர்ப்பு நாய்களை வீட்டிலேயே அடைத்து வைப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதிரானது. இதனால் அவற்றுக்கு தீமை விளையும், இதற்குப் பதிலாக, செல்லப்பிராணிகளை எவ்வாறு தெருவில் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்பது குறித்து உரிமையாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவில், ஹாங்சூ நகரத்தில் நாயை தெருவில் அழைத்துக்கொண்டு பகல் பொழுதில் வரவும், 45 செ.மீட்டருக்கு மேல் உயரமுள்ள பெரிய இன நாய்களை வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.