"பூமியில கடல்கள் இப்படியும் உருவாகி இருக்கலாம்".. ஆய்வாளர்கள் சொல்லிய வினோத தகவல்.. ஒரு சிறுகோள் மொத்த கான்செப்ட்டையும் மாத்திடுச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுகோள்கள் மூலமாக பூமிக்கு நீர் வந்திருக்கலாம் என புதிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் ஜப்பானை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கோள்கள் மட்டுமல்லாது சிறு, குறுங்கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன. இப்படி பூமிக்கு அருகில் பயணிக்கும் விண்கற்கள் சில சமயங்களில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறுகோள் ஒன்றிலிருந்து பூமிக்கு வந்த விண்கல்லை ஆய்வு செய்ததில் அதில் பல்வேறு முக்கிய பொருட்கள் இருப்பதை கண்டு திகைத்துப்போயிருக்கின்றனர்.
ஹயபுசா2
பூமி எவ்வாறு உருவானது, உயிரினங்கள் வளர்ச்சி அமைந்த விதம் குறித்து ஆராய்வதே இந்த ஹயபுசா2 திட்டமாகும். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் ரியுகு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் மூலமாக பெறப்பட்ட மாதிரிகளில் ஏற்கனவே அமினோ அமிலங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
உணவு, வளர்ச்சி, உடல் திசுக்களை சரிசெய்தல் மற்றும் பல உடல் செயல்பாடுகளைச் செய்ய உதவும் அமினோ அமிலங்கள் இந்த சிறுகோளில் கண்டறியப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் ஆய்வுக்கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கடல்களின் உருவாக்கம்
Nature Astronomy இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், விஞ்ஞானிகள் Ryugu மாதிரிகளால் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின என்ற மர்மத்திற்கு விடை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். ஆவியாகும் தன்மை மற்றும் கரிமம் நிறைந்த சி-வகை சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் அந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மேலும்,"பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின? என்பது இன்னும் விவாதத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. அந்த வகையில் ஆவியாகும் தன்மையுள்ள மாதிரிகள் Ryugu சிறுகோளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்த ஆராய்ச்சியை முக்கியமானதாக மாற்றியுள்ளது" என அந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், புவியின் துவக்க காலத்தில் இந்த கற்கள் மட்டுமே ஒரே ஆதரமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
