21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விண்கல்.."இப்படி ஒன்ன நாங்க பாத்ததே இல்ல".. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய ஷாக்-ஆன தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்21 ஆம் நூற்றாண்டில் பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல்லில் வித்தியாசமான படிகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் சூரியனை பிற கோள்கள், சூரியனை சுற்றிவருவதை போலவே விண்கற்களும் விண்வெளியில் பல்லாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகின்றன. இவை சில சமயங்களில் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. அப்படி பூமியின் வளமண்டலத்திற்குள் நுழையும் விண்கற்கள் காற்றில் அதிவேகத்துடன் உராய்வதால் தீப்பிடித்து வானிலேயே சாம்பலாகி விடுவதுண்டு.
ஆனால், அவற்றிலிருந்து தப்பி பூமிப் பரப்பை அடையும் விண்கற்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். அப்படியான ஒரு சம்பவம் கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்தது.
விண்கல்
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் 1440 கிலோமீட்டர் தொலைவில் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இந்த பிரம்மாண்ட விண்கல் விழுந்தது. சூப்பர்போலைடு என்று அழைக்கப்படும் இந்த விண்கல் எரிந்த நிலையில், வந்து பனிப்பாறையில் மோதியது. இதனால் 3000 கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும், இதன் காரணமாக 1000 பேர் காயமடைந்தனர். 21 ஆம் நூற்றாண்டில் பூமியில் விழுந்த விண்கல்லில் இதுவே பெரியதாகும். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆராய்ச்சியளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
ஆராய்ச்சி
இந்நிலையில், இந்த விண்கல்லின் துகள்களை ரஷ்யாவில் இருக்கும் தெற்கு யூரல் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்துவந்தனர். இதில், இந்த விண்கல்லில் மிகச்சிறிய கார்பன் படிகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களில் இதுபோன்ற ஒன்றை தாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள்,"இந்த விண்கல்லில் கார்பன் படிகங்கள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்தோம். ஆப்டிக்கல் டெலஸ்க்கோப் வழியாக மேற்கொண்ட இந்த ஆய்வில் கார்பன் படிகங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறோம். கெமிக்கல் மற்றும் எக்ஸ் ரே ஆய்வுகளின் மூலம் இதன் மையப்பகுதியில் கிராஃபைட் படிகங்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது" என்றனர்.
21 ஆம் நூற்றாண்டில் பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல்லான சூப்பர்போலைடில் கார்பன் படிகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது, விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.