QUEEN ELIZABETH : இறுதி சடங்கில் காவலாளியாக நின்ற இளைஞர்.. சமீபத்தில் மர்மமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி?!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் ராணியாக கடந்த 70 ஆண்டுகள் ஆண்டு வந்த ராணி எலிசபெத், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் தனது 96 ஆவது வயதில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அரச முறையை பின்பற்றி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ராணி எலிசபெத் உடல் இருந்த சவப்பெட்டியை சுற்றி காவலாளிகள் நிறைய பேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அடுத்தடுத்து ராணி குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு அரிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தற்போது வெளி வந்துள்ள தகவல் ஒன்று பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
ராணி எலிசபெத் உடலின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது உடல் அருகே காவலாளியாக சென்ற இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குதிரைப் படை சிப்பாயான ஜாக் பர்னெல் வில்லியம்ஸ் என்பவர் தான் உயிரிழந்துள்ளார்.
லண்டன் அருகே அமைந்துள்ள Hyde Park Barracks என்னும் பகுதியில் ஜாக் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த மரணம் எதிர்பாராத ஒன்று என்றும் அதே வேளையில், சந்தேகத்திற்குறிய மரணமாக இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும், ஜாக்கின் தாயாரும் மகனின் மரணத்தை உறுதி செய்துள்ள நிலையில், திடீரென மகன் மறைந்ததால் ஒட்டுமொத்த குடும்பமும் நொறுங்கி போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜாக் மரணம் இயற்கையான ஒன்றாகவே கருதப்பட்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் இதுகுறித்து தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாக் தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்த நிலையில், அவரது பெற்றோர் பகிர்ந்த புகைப்படங்கள் காண்போர் பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.