ராணி எலிசபெத் மறைவதற்கு ஐந்து நாட்கள் முன்பு.. நண்பரிடம் பகிர்ந்து கொண்ட விஷயம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் கடந்த சில தினங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.
கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசு மரியாதை படி ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், ராணி எலிசபெத் மரணம் அடைவதற்கு சில தினங்கள் முன்பாக தன்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பற்றி, பாதிரியார் மற்றும் ராணியின் நண்பர் ஒருவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் படி, ராணி எலிசபெத் மறைவதற்கு ஐந்து நாட்கள் முன்பாக, ஓய்வு பெற்ற பாதிரியாரான Iain Greenshields என்பவர், அவரை சந்தித்துள்ளார்.
அப்போது, அவரிடம் ராணி பேசிய விவரங்கள் குறித்து Iain Greenshields தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ராணியாக பதவியேற்ற காலத்தில், நாட்டை ஆள ஞானம் வேண்டும் என கடவுளிடம் கேட்டுக் கொண்டதாகவும், அது அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தததாகவும் கூறி உள்ளார்.
மேலும், தனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கிடையாது என ராணி கூறியதாக குறிப்பிடும் GreenShields, அவரிடம் அதிகாரம் இருந்த போதிலும் மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தனது நாட்டுக்காக உழைப்பதில் தான் தீவிரம் காட்டினார் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல, ராணி எலிசபெத்தை சந்தித்த போது, வாழ்நாளின் கடைசி நாட்களில் இருப்பது போல எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மிகவும் ஆரோக்கியமாக இருந்த அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தன்னிடம் ராணி பேசிய போது மிகவும் ஜாலியாக நிறைய ஜோக்குகள் கூறி பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.