"அந்த நோய்க்கு ஒரு வாசனை இருந்துச்சு!.. அதே மாதிரி கொரோனாவையும் இவங்க கண்டுபிடிப்பாங்க".. அடுத்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 17, 2020 09:55 AM

இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவுக்காக 2 லட்சத்து 36 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 ஆயிரத்து 998 பேர் உயிரிழந்துமுள்ளனர். இந்த கொடிய வைரஸ் நோயான கொரோனாவை விரட்டியடிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய, கடந்த மார்ச் முதலே இங்கிலாந்து அரசு பல வழிகளிலும் நிதிகளை ஒதுக்கியது.  இந்த நிலையில், அறிகுறி இன்றி, கொரோனா நோய்த்தொற்றுள்ளவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

Sniffer dogs trained to find asymptomatic covid19 cases

பொதுவாக  போதைப்பொருள்களை கண்டறிவதில், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நாய்களைப் பயன்படுத்தி சோதனை செய்வார்கள். இதேபோல் புற்றுநோய்களைக் கண்டறியவும் இங்குள்ள நாய்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாப்ரடோர்ஸ் மற்றும் காக்கர் ஸ்பானியல்ஸ் கலவை இன மோப்ப நாய்களைப் பயன்படுத்தினால், கொரோனா சோதனையில் விரைவான முடிவுகள் கிடைக்கும் என்று நம்புவதாக இங்கிலாந்து அமைச்சர் ஜேம்ஸ் பெத்தேல் கூறி உள்ளார்.

முதற்கட்டமாக லண்டன் மருத்துவமனைகளில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் கொரோனா தொற்றுள்ளவர்களிடம் இருந்தும், நோய்த்தொற்று இல்லாதவர்களிடமிருந்தும் மாதிரிகளை சேகரித்து,  6 நாய்களுக்கு மாதிரிகளிலிருந்து வைரஸை அடையாளம் காண்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், ஒவ்வொரு சோதனையிலும் ஒரு மணி நேரத்திற்கு 250 பேர் வரை நாய்களின் மோப்ப சக்திமூலம் பரிசோதனை  செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி எல்.எஸ்.எச்.டி.எம் நோய் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் கூறும்போது, இதற்கு முந்தைய ஆய்வில், மலேரியாவுக்கு என்று ஒரு தனித்துவமான வாசனை இருப்பதாகவும், அதை வைத்து மெலேரியத் தொற்றினை கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்ததோடு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மோப்ப நாய்களைக் கொண்டு கண்டறியப்பட்டால், அது புரட்சிகரமானதாக இருக்கும் என்றும் இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த்தொற்றுகளை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.