"பெத்த பொண்ண பாக்க காசு இல்லாம பிச்சை எடுக்குறேன்" ..கோயம்பேட்டில் வசிக்கும் ஆதரவற்ற பெண்களின் துயரம்..கலங்கவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசித்துவரும் ஆதரவற்ற பெண்கள் தங்களது வாழ்க்கை குறித்தும் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் நம் Behindwoods குழுவிடம் பகிர்ந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உறவினர்கள் யாரும் இன்றி, பொருளாதார வசதி இல்லாமல் இந்த பேருந்து நிலையத்திலேயே பலர் தங்கி வருகின்றனர். இவர்களை சந்தித்த Behindwoods குழு அவர்களுடைய வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தது.
கண்ணீர்
கையில் பணம் இல்லாததால் தன்னுடைய மகளைக் கூட பார்க்கச் செல்ல முடியவில்லை என கூறிய ஒரு பெண்மனி," ஏழு வருடங்களுக்கு முன்னால் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அதற்கு முன்பாகவே எனது கணவனும் மறைந்துவிட்டார். அப்போது என்னுடைய பெண் குழந்தைக்கு ஆறு வயது. சிரமப்பட்டு என்னுடைய குழந்தையை வளர்த்து திருமணம் செய்து கொடுத்தேன். எனக்கு ஒரு பேரன் மற்றும் ஒரு பேத்தி உள்ளனர். கையில் காசு இல்லாததால் என்னால் அவர்களை போய் பார்க்கக்கூட முடியவில்லை" என கண்ணீர் ததும்ப கூறினார்.
நம்மிடம் பேசிய மற்றொரு வயதான பெண்மணி, "என்னுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சில இடங்களில் என்னை வேலைக்கு அழைத்தார்கள். ஆனால் ஒரு இடத்தில் தங்கி வேலைக்கு சென்று வருவது என்பது என்னுடைய பொருளாதார வசதியால் செய்ய முடியாத காரியமாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது சிறிய சிறிய வேலைகளை செய்து எனக்குத் தேவையானவற்றை நானே செய்து கொள்கிறேன்." என்றார்.
கவலை
ஆதரவு இல்லாததன் காரணமாக பேருந்து நிலையத்தில் வசிப்பதாக சொல்லிய பெண்மணி," என்னுடைய வீட்டுக்காரர் இறந்து போகவே வேறுவழியில்லாமல் நான் இங்கே வந்துவிட்டேன். என்னுடைய மகள் ஒருவர் திருமணமாகி சென்று விட்டார். அவரை கூட பார்க்க முடிவதில்லை" என கவலை தெரிவித்தார்.
குளியலறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததன் காரணமாக இங்கே தங்கி இருக்கும் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்த நபர், " இங்கே வசிப்பவர்களின் பெரும்பாலானோர் குடும்ப பிரச்சனைகள் காரணமாக வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் தான். முன்பு போல வேலையும் கிடைப்பதில்லை. இங்கு வசித்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான குளியலறை உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

மற்ற செய்திகள்
