நெஞ்சை பிடிச்சுகிட்டு உக்கார்ந்த இளைஞர்.. உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் உக்ரைனின் வரலாற்றையே மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறது. கடல், வான், தரை என உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது ரஷ்யா.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் இந்திய மாணவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவிவருகிறது. அந்நாட்டின் பெரிய நகரமான கார்க்கிவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயது மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாபை சேர்ந்த மாணவர் ஒருவரும் நேற்று மரணம் அடைந்து இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பின் பர்னாலா பகுதியை சேர்ந்த சந்தன் ஜிண்டால் (22), உக்ரைனில் உள்ள வின்னிட்சியா நேஷனல் பைரோகோவ் மெமோரியல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
ஸ்ட்ரோக்
இந்நிலையில், நேற்று சந்தன் ஜிண்டாலுக்கு மூளையில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் வின்னிட்சியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றே மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சந்தன் ஜிண்டாலின் பெற்றோரும் உக்ரைனிலேயே இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி," உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்திருக்கிறார். அவரது பெற்றோரும் உக்ரைனிலேயே வசிக்கின்றனர்" என்கிறார்.
கோரிக்கை
இந்நிலையில், தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் சந்தன் ஜிண்டாலின் தந்தை. இதே போல, கடந்த மார்ச் 1 ஆம் தேதி, ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் மரணமடைந்த நவீன் என்னும் மாணவரின் உடலையும் இந்தியா கொண்டுவர அவரது தந்தை கோரிக்கை வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.