‘என் மகன் 97% மார்க் வாங்கியிருக்கான்’.. மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அமைச்சர் கூறிய சர்ச்சை கருத்துக்கு உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை பதிலளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வான்வழி தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. அதில் உக்ரைனின் கீவ் நகரில் நடத்திய தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் உயிரிழந்தார்.
இதனிடையே இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதில், ‘வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது சரியான நேரம் இல்லை’ என கூறியிருந்தார். அமைச்சரின் கருத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு உக்ரைனில் உயிரிழந்த நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடர் பதிலளித்துள்ளார். அதில், ‘இங்கு மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு நன்கொடை அதிகம். கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், புத்திசாலி மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் போது குறைந்த தொகையே செலவாகிறது. ஆனால் இங்கே இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சீட் பெற கோடிகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. என் மகன் நவீன் பள்ளித்தேர்வில் 97 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார்’ என சேகரப்பா ஞானகவுடர் தெரிவித்தார்.
இதுகுறித்து நவீனின் சித்தப்பா பேசுகையில், ‘நவீன் குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்டது. அவரது அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நவீன் மருத்துவராக வேண்டும் என்று அவரது பெற்றோர் மிகவும் விரும்பினர். அவரை உக்ரைனுக்கு அனுப்ப உறவினர்கள் அனைவரும் பணம் திரட்டி செலுத்தினோம். மேனேஜ்மென்ட் கோட்டாவின் கீழ் உள்ள மருத்துவ சீட்டுக்கு இங்கே மிகவும் அதிகமாக செலவாகும். அதனால்தான் நவீன் உக்ரைனில் படிக்க முடிவு செய்தார்’ என உருக்கமாக கூறியுள்ளார்.