உக்ரைன் எல்லையில்..60 கிலோமீட்டர் நீள ரஷ்ய படை...பதறவைக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றோடு ஆறாவது நாள். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை அடுத்து அண்டை நாடான பெலாரசில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை துவங்கியுள்ளனர்.

கடல், வான் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்திவருகிறது. இதுவரையில் உக்ரைனில் 14 சிறுவர்கள் உட்பட 352 மக்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உச்சமடையும் போர்
ஒருபக்கம் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டு மற்றொரு பக்கம் உக்ரைனின் கார்கிவ் , கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா. இந்நிலையில், உக்ரைன் தலைநகரான கீவ் -ற்கு அருகே சுமார் 64 கிலோமீட்டர் நீளத்திற்கு ரஷ்ய படைகள் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
64 கிலோமீட்டர் படை
அமெரிக்காவின் மக்சார் டெக்னாலஜி (Maxar Technologies) என்னும் நிறுவனம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முன்னதாக, 27 கிலோமீட்டராக இருந்த இந்த அணிவகுப்பு தற்போது 64 கிலோமீட்டராக அதிகரித்து இருக்கிறது.
இந்தப் படைகள் கீவ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தினை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததை பல நாடுகள் நேரடியாகவே கண்டித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன்," இந்த போரினால் ஏற்படும் விளைவுகளுக்கு ரஷ்யாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" எனக் கூறி இருந்தார். அதே போல, இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்றோரும் புதினின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், ரஷ்யா மீது உலகின் பல முன்னணி நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆனாலும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்காமல் உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது இறுதிக்கட்ட யுத்தத்தை ரஷ்யா நிகழ்த்த இருப்பதாக உலக தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
