'அந்த பயம் இருக்கணும்'!.. தாலிபான்களுக்கே தண்ணி காட்டும் ஆப்கான் சிங்கப் பெண்!.. யார் இவர்?.. இப்போது அவர் நிலைமை என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை ஒடுக்கி வரும் நிலையில் அங்குள்ள பெண் ஆளுநர் ஒருவர் அவர்களை துணிச்சலாக எதிர்த்து நிற்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 30,000க்கும் அதிமான மக்கள் வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சர்கின்ட் மாவட்டத்தின் முதல் பெண் ஆளுநர் சலீமா. கடந்த 2018ம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 40 வயதான இவர், வெறும் ஆளுநராக மட்டுமின்றி கடந்த 2019ம் ஆண்டு முதல், தாலிபான் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
தாலிபானுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் சலீமா. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சலீமாவின் மாவட்டத்தை பெருமளவில் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
அவர் மாவட்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்க 600 உள்ளூர் வாசிகளை நியமித்திருந்தார். அங்கு நியமிக்கப்பட்ட 600 பேரும் சாதாரண விவசாயிகள் தான். அவர்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளை விற்று ஆயுதங்களை வாங்கி தாலிபான்களுக்கு எதிராக களத்தில் நின்றவர்கள்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் அடிபணிந்தபோதும், இறுதிவரை போராடியது சலீமாவின் மாவட்டம் தான். தாலிபான்களை ஒடுக்க துப்பாக்கி ஏந்தி களத்தில் நிற்கவும் தயங்க மாட்டேன் என வீர உரையாற்றிவர் சலீமா.
"அவர்கள் வருவதற்காக நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். எனக்கு அல்லது என் குடும்பத்திற்கு உதவ யாரும் இல்லை. நான் என் கணவருடனும் உட்கார்ந்திருக்கிறேன். என்னால் என் குடும்பத்தை விட்டு வெளியேற முடியாது" என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான், தாலிபான்களின் கடும் விமர்சகரான இவரை தாலிபான்களால் தற்போது தடுப்பு காவலில் வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கான் ராணுவம் பின்வாங்கியபோதும் எதிர்த்து நின்றவர் இந்த சலீமா. இவர் தற்போது தாலிபான்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு பத்திரிகையாளர் நதியா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானின் முதல் பெண் ஆளுநர் சலீமா மஜாரி தாலிபான்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
