'நடு ராத்திரி... உசுர கையில பிடிச்சுட்டு இருக்குறப்ப'... தாலிபான்கள் பாதுகாப்போடு.. தாயகம் திரும்பிய இந்தியர்களின் திக் திக் அனுபவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் தப்பிப் பிழைத்தால் போதும் என அந்த நாட்டின் தலைநகரான காபூலில் விமானம் ஏற மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின் ஒரே விமானத்தில் 600 பேர் பயணித்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்நிலையில், தாலிபான் பாதுகாப்புடன் கடந்த திங்கள் அன்று பின்னிரவு நேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர், இந்திய மக்கள் சிலர். அவர்கள் பயணத்தின் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் இரும்பு கதவுகளுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய தாலிபான் படையினர் காத்திருந்தனர். தூதரகத்தின் உள்ளே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பீதியுடன் ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய செய்தியை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், தாலிபானை நீண்ட நெடும் காலமாக ஆதரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியா ஆப்கானிஸ்தானில் அமைந்திருந்த அரசை கடந்த 20 வருடங்களாக ஆதரித்து வந்தது. இதனால் தாலிபானுக்கும், இந்தியாவுக்கும் ஆகவே ஆகாது என சொல்லும் அளவுக்கு உறவு முறையானது இருந்து வந்தது. எனவே தான், தூதரகத்திற்கு வெளியே தாலிபான்கள் ஆயுதங்களுடன் நின்ற போது, அங்கிருந்த இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆனால் இந்தியர்களை பழிவாங்கும் நோக்கில் தாலிபான்கள் அங்கு நிற்கவில்லை என தெரியவந்துள்ளது. மாறாக அவர்களை பத்திரமாக தாயகம் திரும்ப, பாதுகாப்புக்காக அங்கு தாலிபான்கள் ஆயுதம் ஏந்தி நின்றுள்ளனர். அதுமட்டுமின்றி, காபூல் விமான நிலையத்திற்கு இந்தியர்களை பத்திரமாக அழைத்துச் சென்று, அவர்கள் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்த ராணுவ விமானத்தில் ஏற தாலிபான்கள் உதவியுள்ளனர்.
மேலும், தூதரகத்தில் இருந்து வெளிவந்த 24 வாகனங்களை அவர்கள் எஸ்கார்ட் கொடுத்து விமான நிலையம் வரை அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் சிரித்த முகத்துடன் இந்தியர்களை வழி அனுப்பி வைத்துள்ளனர்.
முதலில் இந்தியர்கள் விமான நிலையம் செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தூதரகத்திற்கு உள்ளேயே சிறையில் இருக்க வேண்டி வருமா? எனவும் சிக்கியிருந்தவர்கள் எண்ணி உள்ளனர். இறுதியில் இந்தியா, தாலிபான் அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு தான், தூதரகத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விமான நிலையத்திற்கு இந்தியர்கள் செல்ல தாலிபான் அமைப்பினர் உதவியுள்ளனர்.
உண்மையில், ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் காரணமாக எந்நேரமும் தாங்கள் பயணிக்கின்ற வாகனத்தை யாராவது தாக்கலாம் என உயிரை பிடித்துக் கொண்டே இந்தியர்கள் அந்த வாகனங்களில் பயணித்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்புக்காக வந்த தாலிபான்கள் பயணத்தின் போது ஆங்காங்கே குவிந்திருந்த மக்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இறுதியில் விமான நிலையம் அடைந்தவுடன் அமெரிக்க படையினரை இந்தியர்கள் அணுகி உள்ளனர். அங்கு விமானப் போக்குவரத்தை நிர்வகித்து அமெரிக்கர்கள் தான். அதைத் தொடர்ந்து, ஒருவழியாக ராணுவ விமானத்தில் இந்தியரகள் இடம் பிடித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அந்த ராணுவ விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.