‘இந்திய நிறுவனம் தயாரிக்கும் கொரோனா மருந்து’.. ‘92 உலக நாடுகளுக்கு வழங்க முடிவு’.. ‘ஒரு டோஸின் விலை இதுதான்’!
முகப்பு > செய்திகள் > உலகம்சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவது தொடர்பாக பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக
மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சீரம் நிறுவனம் விளங்குகிறது.
இந்த நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள 'கோவிஷீல்டு' என்கிற கொரோனா தடுப்பூசி மருந்தை 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்தும் வருகிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது தொடர்பாக சீரம் நிறுவனம் பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தை உள்நாட்டிலும் வளரும் பல நாடுகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருந்து கண்டு பிடிப்பதற்காக சீரம் நிறுவனம் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து நிமிடத்திற்கு 500 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் விலையையும் இத்துடன் அறிவித்துள்ளது. அதன்படி 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து ஒரு டோஸ் 225 ரூபாய் என்கிற விலையில் 92 நாடுகளில் விற்பனைக்கு வரும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.