'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடணுமா, வேண்டாமா'... 'சென்னையில் திறக்கப்படவுள்ள ஜிம்கள்'... அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் அதையே நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உடற்பயிற்சி கூடங்கள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் வரும் 10-ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. தற்போது உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடங்களில் பொதுவான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுச்சுகாதார முறைகள் பின்பற்றப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க அனுமதி இல்லை. சுகாதாரம் தொடர்பாக அரசு வெளியிடும் உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 50 வயதுக்கு அதிகமானோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள் உடற்பயிற்சி கூடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது ஒவ்வொருவரும் குறைந்தது 6 அடி இடைவெளி விட்டிருக்க வேண்டும். உடற்பயிற்சிகூட வளாகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இதனிடையே உடற்பயிற்சி செய்யும்போது மட்டும் முடிந்த அளவு ‘வைசர்‘ (பேஸ் ஷீல்ட்) என்ற உபகரணத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், முகக்கவசங்கள், குறிப்பாக என்-95 ரக முகக்கவசங்கள், உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்தும். கைகளை அவ்வப்போது சோப்பினாலோ அல்லது ஆல்கஹால் சானிடைசர் மூலமாகவோ கழுவ வேண்டும். இருமல், தும்மல் வந்தால் முகத்தையும், மூக்கையும் கைக்குட்டை, ‘டிசு’ பேப்பர் பயன்படுத்த வேண்டும். ‘டிசு’ பேப்பரை உடனடியாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். கைகளை மடித்த நிலையில் அதில் முகத்தைப் புதைத்தபடி தும்மலாம்.
உடற்பயிற்சி கூட்டத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்களை அமைக்க வேண்டும். ஏ.சியின் அளவை 24 முதல் 30 டிகிரி அளவிற்கு வைக்க வேண்டும். நன்கு காற்றோட்டமாக வெளி கற்று உள்ளே வரும் வகையில் உடற்பயிற்சி கூடம் இருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் உடற்பயிற்சி கூடத்தின் பொதுத் தளம், குறிப்பிட்ட பயிற்சி பிரிவு, ஆடை மாற்றும் இடங்களில் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி கூடத்தில் இயங்கும் ஸ்பா, சாவ்னா, நீராவிக் குளியல், நீச்சல் குளம் போன்றவற்றைத் திறக்க அனுமதி இல்லை. அவை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடத்தின் அனைத்து பகுதிகளும் அவ்வப்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்களைக் கண்டிப்பாக வாசலில் வைத்து உடல் வெப்ப பரிசோதனை செய்து, கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். அதேபோன்று பல்ஸ் ஆக்சிமீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை சோதிக்க வேண்டும். மேலும் உடற்பயிற்சி கூடத்தை மூடும்போது வளாகம் முழுவதையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
