நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தொழிலாக கொண்ட மனிதர்; ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்நம் அன்றாட வாழ்க்கையில் பலரால் வெறுத்து ஒதுக்கும் சில விஷயங்களில், நீண்ட வரிசையில் கால் வலிக்க நிற்பதும் ஒன்றாக இருக்கும். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களிலோ, அவசரமான வேலைகள் அடுத்தடுத்து இருக்கும் சமயங்களிலோ இதைப் போன்று வரிசையில் நிற்பது அதிக எரிச்சலைத் தரக்கூடும். ஆனால், எங்கே சவால் இருக்கிறதோ அங்கே வாய்ப்பு இருக்கும் அல்லவா?
அப்படி, நீண்ட வரிசையில் நிற்பதைத் தன் தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு மனிதர். அதற்கு Professional Queuer என்ற பெயரும் இருக்கிறதாம்.
ஃபிரெடி பெக்கிட் என்னும் லண்டனைச் சேர்ந்த நபர் இந்தப் பணியை வெகு நாட்களாக செய்து வருகிறார். அவர், நீண்ட வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்களை வாடிக்கையாளராக கொண்டுள்ளார். அப்படி நிற்பதன் மூலம் ஒரு நாளைக்கு 160 பவுண்டுகள் வரை சம்பாதிக்கிறாராம். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,000 ரூபாய் ஆகும்.
31 வயதாகும் ஃபிரெடி, மிக நீண்ட நேரத்துக்கு வரிசையில் நிற்பது தனக்கு எப்போதும் பிரச்சனையாக இருந்ததில்லை என்கிறார். ஆனால், அப்படி நிற்பதற்கு அதிக பொறுமையும், சாந்தமான மனநிலையும் அவசியம் எனக் கூறுகிறார்.
அவர் மேலும், ‘பல்வேறு விஷயங்களுக்கு நான் வரிசையில் நின்று, அதற்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டாலும் எனக்கு மிகவும் பிடித்தது பிரபலமான விழாக்களுக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதுதான்.
அப்படி வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது என்பதே நமக்குப் பல்வேறு அனுபவங்களைத் தரும். நான் லண்டனைச் சேர்ந்த பல்வேறு வயதான செல்வந்தர்களுக்கு இந்த வேலையைச் செய்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.