இதுக்கு முன்னாடி இப்படி கேள்விப்பட்டதே இல்ல.. சென்னையில் நடந்த நூதன கொள்ளை.. மிரள வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சிம் சுவாப் மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் பிரபல கண் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து கடந்த மாதம் திடீரென 24 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளது. உடனே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது OTP எண் அனுப்பப்பட்டு இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது எப்படி நடந்தது? என குழம்பிப்போன மருத்துவமனை நிர்வாகம் உடனே இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ‘சிம் சுவாப்’ மூலம் இந்த திருட்டு சம்பவம் நடந்து இருப்பதை கண்டுபிடித்தனர். சிம் ஸ்வாப் என்பது, தனி நபர்கள் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் முதல் வேலையாக வங்கி கணக்குடன் தொடர்புடைய சிம் கார்டு தொலைந்து விட்டதாக சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்தை தொடர்புகொண்டு அந்த எண்ணை முடக்குவார்கள்.
இதனை அடுத்து தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் போலியான ஆவணங்களை கொண்டு அதே எண்ணில் புதிய சிம்கார்டை வாங்கிக் கொள்வார்கள். இதனால் வாடிக்கையாளரின் வங்கியில் இருந்து வரும் OTP எண் நேரடியாக இந்த திருட்டு கும்பலின் செல்போனுக்கு வந்துவிடும். அதன்மூலம் பணப் பரிவர்த்தனைகளை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இந்த பாணியில்தான் சென்னை கண் மருத்துவமனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்து 24 லட்சம் ரூபாய் 16 வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு ஏடிஎம் மூலம் பணம் எடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் மேற்குவங்கம் விரைந்தனர். அம்மாநில காவல்துறையினர் உதவியுடன் பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையத்தை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இருவரின் உருவம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது புகைப்படத்தை வைத்து ஏடிஎம் மையத்தை சுற்றி வீடுவீடாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவர் போலீசில் சிக்கிக் கொண்டார். அவர் மூலம் மற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அதில் சையத்தன் முகர்ஜி, ராகுல் ராய், ராகோன் அலிசானா, ராகேஷ் குமார் சிங் என்ற 4 பேரை பிடித்த போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
இதுகுறித்து தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ‘பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் இதுபோன்று எத்தனை மோசடிகளை செய்துள்ளனர் என விசாரித்து வருகிறோம். இந்த மோசடிக் கும்பலின் தலைவர் உத்திரபிரதேசம் சென்று தலைமறைவாகி உள்ளார். அவரை கண்டு பிடிக்கவும் தனிப்படை விரைந்துள்ளது’ என தெரிவித்தார். இந்த கும்பலிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள், ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சிம் சுவாப் முறையில் நூதனமாக பணத்தை கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
