ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவி செய்வதாக நம்ப வைத்து.. சின்ன கேப்பில் பெரிய மோசடி செய்த இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பெண்ணிடம் ஏடிஎம் கார்டை ஏமாற்றி பெற்று பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம் மையங்களில் முதியவர்களையும், தொழிநுட்பங்களையும் சரியாக கையாளத் தெரியாத மக்களை குறி வைத்து மோசடி கும்பல் இயங்கி வருகிறது. இதில் நிறைய முதியவர்கள் தங்கள் குழந்தைகள் அனுப்பும் பணத்தை இழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் மோசடி கும்பல் தினுசு தினுசாக புதிய திட்டங்களைக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.
பணம் எடுத்து தர சொல்லி கேட்டல்:
இந்த நிலையில், பர்கூர் அடுத்த பாகிமானூரைச் சேர்ந்தவர் மேகலா (38). மகளிர் சுய உதவிக் குழு தலைவராக உள்ளார். மேகலா தன் தோழி கோகிலா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து வைத்திருந்தார். பின்னர் தனது தேவைக்காக அந்தப் பணத்தை கேட்டார். எனவே, கோகிலா தன் கணவரின் ஏடிஎம் கார்டை கொடுத்து அதில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
நாங்கள் உதவி செய்கிறோம்:
அதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி பர்கூரில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பணம் எடுக்க மேகலா சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த 2 இளைஞர்கள் மேகலாவுக்கு உதவி செய்ய தாமாக முன்வந்துள்ளனர்.
அதன்பிறகு ஏடிஎம்-ல் பணம் இல்லை என்று கூறி ஏடிஎம் கார்டை மேகலாவிடம் திருப்பி கொடுத்துள்ளனர். சற்று நேரம் கழித்து அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கோகிலாவின் கணவருக்கு செய்தி சென்றுள்ளது.
போலீசில் புகார்:
அதன் பிறகு, அந்த இளைஞர்கள் ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு, ஏமாற்றி எடுத்துச் சென்ற ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து பர்கூர் காவல் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார்.
போலீஸாரின் விசாரணையில் ஓசூர் வட்டம் மத்திகிரி அடுத்த கொத்தகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மணி (27 வயது), மஞ்சுநாத் (33 வயது) ஆகியோர் ஏமாற்றி ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று பணம் திருடியது தெரிய வந்தது. எனவே, அவர்கள் இருவரையும் உடனடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.