பனாமா பேப்பர்ஸ் வழக்கு: அமலாக்கத்துறை சம்மன்... நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நேரில் ஆஜர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபனாமா பேப்பர்ஸ் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இதையடுத்து இன்று மதியம் ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜரானார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் வெளிநாடுகளில் சொத்துக் குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவே ஐஸ்வர்யா ராய்-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐஸ்வர்யா ராயை ஏற்கெனவே 2 முறைகள் அமலாக்கத்துறையினர் விளக்கம் அளிக்க வரும்படி சம்மன் அனுப்பப்பட்டும் தனக்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார்.
அந்நிய செலாவணி மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் குறித்து ஐஸ்வர்யா ராய் குடும்பத்தாரிடம் விளக்கம் கொடுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக ஐஸ்வர்யா ராய் இதுவரையில் வெளிநாடுகளில் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ‘பனாமா பேப்பர்ஸ்’ என்பது பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை கடந்த 2016-ம் ஆண்டு ஜெர்மனி ஊடகம் ஒன்று வெளியிட்டது. அதில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர்களின் வெளிநாட்டு சொத்துகள், முதலீடுகள், ஷெல் கம்பெனிகள், வரி ஏய்ப்பு மோசடிகள் என அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட்டன.
இதில் பல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பிரபலங்கள் ஆகியோரின் நிதி நிலை ஆவணங்களும் லீக் செய்யப்பட்டன. இந்த ‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் சுமார் 300 இந்தியர்களின் பெயர்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.