பிரதமரை விமர்சித்து நிகழ்ச்சி... தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு, மத்திய தகவல்ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொங்கல் தினத்தன்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து காமெடி கலந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கற்பனை கலந்து நடித்தது பலரையும் கவர்ந்தது. இதில் இம்சை அரசன் 2-ம் புலிகேசி போலவும் அவரது மங்குனி அமைச்சர் போலவும் சிறுவர்கள் வேடமிட்டு காமெடி நிகழ்ச்சி நடத்தினர்.
விமர்சனம்
இதில், கருப்பு பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் உள்ளிட்டவை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தன. இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு என ஒரு சிறுவன் பேசுவதாக இடம்பெற்றது.
பாஜகவினர் ஆவேசம்
இதை கண்டு பலரும் ரசித்து சிரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைதான் பெயர் குறிப்பிடாமல் இந்த நிகழ்ச்சி பேசியிருப்பதாகவும், இது கண்டனத்திற்குரிய செயல் என்றும் பாஜக ஆதரவாளர்கள் கடும் வாதங்களை முன்வைத்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்ச்சிக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
அண்ணாமலை
பிறகு இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீயாகப் பரவியது. சிறுவர்களுடன் பாஜக மல்லுக்கட்டுகிறது என்பதை வைத்தும் ஹேஷ்டெக்குகள் டிரெண்டானது. இந்நிலையில், பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிபகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
நோட்டீஸ்
இதனையடுத்து மத்திய தகவல், தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு பதில் கேட்டு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லை எனில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.