பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த ட்வீட்டிற்கு சித்தார்த் மன்னிப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு சாய்னா நேவால் தனது கருத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது, அவரை போராட்டக்காரர்கள் வழி மறித்ததால், அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால், பயணத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு டெல்லி திரும்பியிருந்தார்.
இந்த சம்பவத்தால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் மீது, பாஜக ஆதரவாளர்கள் எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்தனர். பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக, தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
வலுத்த கண்டனங்கள்
இதனைத் தொடர்ந்து, சாய்னாவின் கருத்தைக் குறிப்பிட்ட நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் விளையாட்டுடன் ஒப்பிட்டு, இழிவான கருத்து ஒன்றை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இது பற்றி, அரசியல், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தொடங்கி பலரும், தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
வழக்குப் பதிவு
சாய்னாவின் குடும்பத்தினர் கூட, சித்தார்த்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல், நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யவும், மகாராஷ்டிர காவல்துறை டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என சித்தார்த்தும் குறிப்பிட்டார்.
மன்னிப்பு கடிதம்
தனது கருத்திற்கு அதிக கண்டனங்கள் எழுந்த நிலையில், தன்னுடைய ட்வீட்டிற்கு, நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், நான் எழுதிய பதிலில் இருந்த rude ஆன ஜோக்கிற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றும், எனது வார்த்தை விளையாட்டானது, எந்தவித தீய நோக்கம் கொண்டதில்லை என்பதையும் நான் வலியுறுத்திக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
வைரலான ட்வீட்
ஒரு பெண்ணாக இருப்பதால் தான், உங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக எனக்கு ஏற்படவில்லை என்றும், நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும், நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான் என்றும், சித்தார்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த மன்னிப்பு கடிதம், அதிகம் வைரலாகத் தொடங்கியது.
மனம் திறந்த சாய்னா
இந்நிலையில், சித்தார்த்தின் மன்னிப்பு பற்றி, சாய்னா நேவால் கருத்து தெரிவித்துள்ளார். 'என்னைப் பற்றி முதலில் கருத்து சொன்ன சித்தார்த், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். ஏன் அது அதிக வைரலானது என எனக்கு புரியவில்லை. அவர் மன்னிப்பு கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
ஒரு பெண்ணை இப்படி நீங்கள் குறி வைத்துத் தாக்கக் கூடாது. உங்களின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்' என பெருந்தன்மையுடன் சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
அதிக கண்டனங்கள் மற்றும் புகார்கள் எழுந்த நிலையில், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டதையடுத்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.