'என்னதான் அதிரடி.. சேல் ஆஃபர் கொடுத்தாலும்..'.. 'இந்த விஷயத்துனால'.. லைட்டா ஒரு 'ஜர்க்'! அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி?
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தற்போது சட்டப் போரில் ஈடுபட்டுள்ளது, ஏனெனில் கிஷோர் பியானியின் நிறுவனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பது அவர்களின் இந்திய வணிக கணக்கை கவிழ்க்கக்கூடும் என்கிற அச்சம் உண்டாகியுள்ளது.

பில்லியனர் முகேஷ் அம்பானி, பியானியின் வணிகத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து, ஜியோமார்ட் மூலமாக தமது வணிகத் தயாரிப்பு சந்தையை விரிவுபடுத்துவதாக தெரிகிறது. இதனிடையே இந்தியாவில் ஜியோமார்ட்டின் ஈ-காமர்ஸ் சந்தை பங்கு இப்போது 1 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக உயரும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா குளோபல் ஆய்வு காட்டுவதால் அமேசான் அச்சப்படுவதில் லாஜிக் இருக்கவே செய்கிறது.
உண்மையில், இந்தியா முழுவதும் 12,000 கடைகளைக் கொண்ட ரிலையன்ஸ் விற்பனைக்கு பியானியின் 1,500 கடைகளை இணைப்பது பெரிய விஷயமல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,500 கடைகளைச் சேர்த்தது. அம்பானியின் வியாபார உக்தியை புரிந்துகொண்டு, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை நாட்டில் தங்கள் முதலீடுகளை அளவிடுகின்றன. அமெரிக்க சில்லறை விற்பனையாளர் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் 47 சதவீத சந்தைப் பங்குகளுடன் இந்திய சந்தையில் முன்னணியில் உள்ளது, அமேசான் 34 சதவீதத்துடன் உள்ளது. முக்கிய அம்சம் என்னவென்றால், இணையவழி சந்தை 2020 ஆம் ஆண்டில் 42 பில்லியன் டாலர்களிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 107 பில்லியன் டாலராக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நீண்ட கால சந்தைப் பங்கைத் தக்க வைத்துக் கொள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் தீவிரமாக போராடுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு சில்லறை வடிவ பங்குகளை வாங்குவதில் அல்லது பெறுவதில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அமேசான் சூப்பர்மார்க்கெட் செயின் மோர் (2018) மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் (2017) ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. பிளிப்கார்ட் சமீபத்தில் அரவிந்த் ஃபேஷனின் ஃப்ளையிங் மெஷின் பிராண்டில் (2020) முதலீடு செய்துள்ளது, அண்மையில் ஆதித்யா பிர்லா பேஷன் (ஏபிஎஃப்ஆர்எல்) நிறுவனத்தில் ரூ.1,500 கோடி 7.8 சதவீத பங்குகளை வாங்கியது.
பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அம்பானியின் டிஜிட்டல் துணிகர ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (ஜேபிஎல்)-ல் பங்குகளை வைத்திருக்கின்றன. தவிர, ஜியோமார்ட், பேஸ்புக்குக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்துடன் ஆன்லைன் வர்த்தக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும், சுமார் 3 கோடி கிரானா கடைகளை ஒருங்கிணைப்பதற்கும் ஒரு ஒப்பந்தத்தை கொண்டுள்ளது. இந்த சூழலில்தான், அமேசான் இன்னும் விழிப்புடன் சந்தையை தக்கவைத்துக் கொள்ளும் சூழலில் உள்ளது.

மற்ற செய்திகள்
