சென்னையை அதிரவைத்த 'பிட்காயின்' மோசடி!.. நைஜீரியாவில் இருந்து ஆட்டிப்படைத்த... சர்வதேச திருட்டு கும்பல்!.. அடையாறு காவல்துறை அதிரடி!.. பகீர் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலியான இணையதளம் தொடங்கி அதில் பிட்காயின்களை முதலீடு செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் என நம்ப வைத்து பணம் பறிக்கும் நைஜீரியன் கும்பலின் மோசடியை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
![chennai bitcoin online fraud it employee nigeria group police chennai bitcoin online fraud it employee nigeria group police](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-bitcoin-online-fraud-it-employee-nigeria-group-police.jpg)
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மோகன் டைடல் பார்க்கில் தனியார் ஐடி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். ஆன்லைன் மோசடி விவகாரத்தில் தன்னை கடத்தி சிலர் மிரட்டுவதாக அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். விசாரணையில் அது பிட்காயின் மோசடி விவகாரம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பே.டிஎம், கூகுள் பே போன்றே swift global pay மற்றும் instant merchant pay ஆகிய பரிவர்த்தனை தளங்களை நைஜீரிய கும்பல் ஒன்று உருவாக்கியுள்ளது. அதில் 45 லட்சம் டாலர் மதிப்புள்ள வாலட் ஒன்று இருக்கும்.
இந்திய ரூபாயில் சுமார் 34 கோடி மதிப்புடைய அந்த பணத்தை பெற, 5 பிட்காயின்களை வாலட் வைத்திருப்பவரின் கணக்கில் செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 7 லட்சம் ரூபாய்.
5 பிட்காயினின் மதிப்பான 35 லட்சம் ரூபாயை செலுத்தினால், இந்திய ரூபாயில் 34 கோடி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறப்படுகிறது. அதை நம்பி பணத்தை கணக்கில் செலுத்தினால் 45 லட்சம் டாலர் நம் கணக்கில் வந்துவிடும். ஆனால் அந்தப் பணத்தை எடுக்கவே முடியாது என்பதுதான் விவகாரமே.
அது தெரியாமல் மோகன் swift global pay தளத்தில் கணக்கு தொடங்கி, 5 பிட்காயின்களை செலுத்த, அவரது வாலட் கணக்கிற்கு 45 லட்சம் டாலர் வந்துவிட்டதாகக் காண்பித்துள்ளது. இதனையடுத்து தரகரான பிரபாகரன், ரமேஷ் ரெட்டி என்ற இரண்டு பேர், மோகனிடம் 50 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். மனைவி, மகளின் நகைகளை அடகு வைத்து 15 லட்ச ரூபாயை அவர்களிடம் கொடுத்ததாகக் கூறுகிறார் மோகன்.
அதன் பின்னரே வாலட்டிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்பது மோகனுக்கு தெரியவந்துள்ளது. ஆனால், மீதமுள்ள பணத்தை தந்தே ஆக வேண்டும் என ரமேஷும் பிரபாகரனும் மிரட்டவே, சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டார் மோகன். அங்கிருந்து அவரை சென்னைக்கு காரில் கடத்தி வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அடையாறு சைபர் க்ரைம் பிரிவில் மோகன் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், பிரபாகர் மற்றும் ரமேஷ் ரெட்டியின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்தபோது, அவர்கள் இருவரும் தி.நகரில் ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)