'முதல் டோஸ் ஒரு ஊசி!.. அடுத்த டோஸ் வேறொரு நிறுவனத்தின் ஊசி'!.. வலுக்கும் ஆற்றல்!.. ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jun 29, 2021 08:48 PM

கொரோனா தடுப்பூசி டோஸ்களில், இருவேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் கலப்பு தடுப்பூசி (Mixed vaccine) வழிமுறை பற்றிய ஆய்வுகள், உலகம் முழுவதும் பல ஆய்வகங்களில் நடந்து வருகின்றன.

pfizer astrazeneca mixed vaccine strong protection study

பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழுவும், அப்படியான ஒரு ஆய்வை முன்னெடுத்திருந்தது.

அதன் முடிவில், பைசர் தடுப்பூசி மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா ஆகிய தடுப்பூசிகளை இரு டோஸ்களாக எடுத்துக்கொள்வோருக்கு, கோவிட் 19 கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் வலுவாக இருப்பதாக உறுதியாகியுள்ளது. 4 வார இடைவெளியில், இவ்விரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டால், அத்தகைய பலன் கிடைப்பதாக இந்த ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அஸ்ட்ராஜெனிகா இரு டோஸ் எடுப்பவர்களை காட்டிலும், இவர்களுக்கு கூடுதல் நோய் எதிர்ப்பு திறன் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க நாடுகள் பலவற்றில், மருத்துவர்களும் பொது சுகாதார அதிகாரிகளும் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வரும் நிலையில், இருவேறு தடுப்பூசிகளை அடுத்தடுத்த டோஸ்களாக எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்ற இந்த ஆய்வு முடிவு, பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. இதன் மூலம், தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்க முடியும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதில், முதலில் பைசர் தடுப்பூசியும், பின்னர் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும் எடுத்துக்கொள்பவர்களுக்கு, அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி முதலிலும், பைசர் தடுப்பூசி அடுத்ததாகவும் எடுப்பவர்களைவிட கூடுதல் பலனிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் மாத்யூ பேசுகையில், "இப்படி இருவேறு டோஸ் அளிப்பது, தடுப்பூசி பற்றாக்குறையை நீக்குவதோடு தடுப்பூசி விநியோகத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மையையும் உண்டாக்கும்" எனக் கூறியுள்ளார்.

இந்த ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்ட 820 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும், முதன்முதலாக சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுக்கு எதிராக மட்டுமே இந்த கலப்பு தடுப்பூசியின் செயல்திறன் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிற கொரோனா திரிபுகளுக்கும் எதிரான செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டால், வரும் மாதங்களில் அதை அடிப்படையாக வைத்து வெவ்வேறு தடுப்பூசி விநியோகித்தை அதிகப்படுத்தலாம் என்ற அடிப்படையில், அவையும் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட ஆய்வில், மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்படுமென தெரிகிறது.

தற்போது, அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் இரு டோஸ்களும் 12 வார இடைவெளியில் தரப்பட்டு வருகிறது. இந்த கால இடைவெளியின் அடிப்படையில், பைசர் - அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகளை 12 வார இடைவெளியில் இரு டோஸ்களாக எடுத்துக்கொண்டால், எந்தளவுக்கு பலன் கிடைக்கும் என்பது பற்றி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கலகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள், இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரக்கூடும்.

இந்த விஷயத்தில், இடைவெளி எந்தளவு அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு கூடுதல் பலன் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதிகபட்சம் 10 மாதங்கள் வரை அதிகரிக்கலாம் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அனைத்தும் ஆய்வு நிலையில் இருப்பதால், அவர்கள் உறுதியாக இதை தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

கடந்த மாதத்தில், இதே ஆய்வு தொடக்க நிலையில் இருந்தபோது, பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை கலப்பு தடுப்பூசி முறையின்கீழ் எடுத்துக்கொள்பவர்களுக்கு உடல்சோர்வு மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பலன் என்று பார்க்கும்போது, அதில் சிக்கல் ஏதுமில்லை என தற்போது சொல்லப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pfizer astrazeneca mixed vaccine strong protection study | World News.