இப்படிதான் பணத்த எல்லாம் திருடுறாங்க.. வட கொரியா-வின் பலே பிளானை போட்டு உடைத்த ஐநா..!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா என்றாலே சீறும் ஏவுகணைகள்.. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ன் விபரீத உத்தரவுகள்.. நம் கற்பனைக்கு எட்டாத கட்டளைகள் என வித்தியாசமான தேசம் அது. உணவுப் பொருட்கள் விளைச்சல் பற்றாக்குறை அங்கு நிலவி வருவதால் லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் அடுத்தட்டு மக்கள் அங்கே மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ஆனால், அந்நாடு புதிய ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளின் வயிற்றில் புளியை கரைக்கும் செயலை மட்டும் இன்னும் செவ்வனே செய்து வருகிறது.
சீறும் ஏவுகணைகள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முறை ஏவுகணை சோதனையில் ஈடுபட்டிருக்கிறது வட கொரியா. வேளாண்மை சொற்பம்.. தொழில்துறை படுத்துவிட்டதால் வேலைவாய்ப்புகளும் குறைவு.. அப்படியானால் வட கொரிய அரசின் இந்த ஏவுகணை சோதனைகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என உலக நாடுகள் சந்தேகத்தில் இருந்தன. இந்நிலையில் வட கொரியாவின் திருட்டு பிளானை வெளிச்சத்தில் போட்டு உடைத்திருக்கிறது ஐக்கிய நாடுகள் அவை (ஐநா)
ஹேக்கிங்
பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதை கொண்டு ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3 கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்களில் இருந்து 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.373 கோடி) வரை திருடியுள்ளனர். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் வடகொரியாவில் குறிவைக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் வட கொரியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருவதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பொதுவாகவே ஐநா மற்றும் உலக நாடுகளின் வலியுறுத்தல்களை வட கொரியா புறக்கணித்துவருவது வழக்கமாகிவிட்டது.
இந்த சிக்கலைத் தீர்க்க முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல, வட கொரியாவிற்கு ட்ரம்ப் பயணம் மேற்கொண்டு நிலைமையை சரி செய்ய முயற்சித்தார். ஆனால் தற்போதுவரை வடகொரியாவின் செயல்பாடுகள் மற்றும் அதிபர் கிம்-ன் முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதே ஐநாவின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.