''இது கொரோனாவை சோதிக்கல...'' ''எங்க பொறுமையத்தான் சோதிக்குது...'' 'சீனாவிடம்' பணத்தை 'திரும்பக் கேட்ட பிரிட்டன்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 23, 2020 07:52 PM

சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் தரமற்றவை என இந்தியாவைத் தொடர்ந்து பிரிட்டனும் புகார் கூறியுள்ள நிலையில், சீனாவிடம் பணத்தை திரும்ப பெற பிரட்டன் அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன.

Non-standard Rapid Test Tools-Britain decides to ask refund

சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த  நிலையில், சீனாவிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் தரமற்றவை என்று பிரிட்டனிலும் புகார் எழுந்துள்ளது.

சீனாவின் ஆல் டெஸ்ட் பயோடெக் மற்றும் வொண்ட்ஃபோ பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ரேபிட் டெஸ்ட் கருவிகளை உற்பத்தி செய்கின்றன. இதில், வொண்ட்ஃபோ பயோடெக் நிறுவனத்திடமிருந்து இந்தியா ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளது.

இந்த கருவிகளை கொண்டு பரிசோதனை செய்ததில், பலருக்கு தவறான தகவல்களை தருவதாக புகார் எழுந்தது. இந்த கருவிகளின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதாக முதன் முதலில் ராஜஸ்தான் மாநிலம் புகார் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து அவற்றை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இதே போன்ற கருவியை இறக்குமதி செய்திருந்த பிரிட்டனும், ரேபிட் டெஸ்ட் கருவிகளின் தரம் குறித்து தற்போது புகார் கூறியுள்ளது.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவித்திருந்தது. இருப்பினும், லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்காக உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்க முனைப்பு காட்டின.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சீன நிறுவனங்கள் விலையை உயர்த்தி ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. ஏற்றுமதிக்கான செலவையும் அந்தந்த நாடுகளே ஏற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து.

இந்நிலையில், சீன நிறுவனங்களிடமிருந்து, சுமார் 20 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பிரிட்டன் அரசு வாங்கியது. இவற்றில் 5 லட்சம் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவை தவறான முடிவுகளை தெரிவிப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சீன நிறுவனங்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற பிரட்டன் அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசு தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், வேண்டுமென்றே பெரிதுபடுத்துவதாகவும் குற்றச்சாட்டியுள்ளன. பிற நாடுகளில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, சீனாவில் இந்த கருவிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்வதாகவும் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.