"நெல்லை டூ மலேசியா".. 55 ஆண்டுகளுக்கு பின் அப்பாவின் கல்லறையைத் தேடிக் கண்டுபிடித்த மகன்.. நெகிழவைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இவரது தந்தை பெயர் பூங்குன்றன் என்கிற ராம சுந்தரம். தாய் பெயர் ராதாபாய் ஆகும்.
திருமாறனின் தந்தையான ராம சுந்தரம் மலேசியாவில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் திருமாறன் பிறந்துள்ளார்.
இதனிடையே, திருமாறன் பிறந்து 6 மாதங்களான நிலையில், கடந்த 1967 ஆம் ஆண்டு ராம சுந்தரம் உயிரிழந்தார். இதனால், கணவர் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்த ராதா பாய், மகனை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, சில ஆண்டுகள் கழித்து உடல்நலம் சரியில்லாமல் ராதா பாயும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், திருமாறனுக்கு சிறு வயதிலேயே பெற்றோர் இல்லாமல் போய் விட்டது.
தனி மரமாக திருமாறன் மாறினாலும் சோர்ந்து போகாமல் ஆதரவற்ற பலருக்கும் தன்னால் ஆன உதவியை செய்து சமூக பணிகளிலும் நிறைய ஆர்வம் காட்ட துவங்கி இருந்தார். தன்னை போல யாருக்கும் ஒரு நிலை வந்துவிட கூடாது என்பதற்காக தனியாக ஆசிரம ஒன்றையும் திருமாறன் நடத்தி வருவதாக தெரிகிறது.
இதற்கு மத்தியில் தனது தந்தையின் நினைப்பு அவ்வப்போது எட்டி பார்க்க, மலேசியாவில் இருக்கும் தனது தந்தையின் கல்லறைக்கு ஒரு நாளாவது சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் திருமாறன் நினைத்துள்ளார். ஆனால், 55 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் இருந்த இடம் மாறி போயிருக்கும் என்பதால் எப்படி வீட்டை கண்டுபிடிப்பது என்றும் யோசித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கூகுள் மேப் உதவியுடன் மலேசியாவில் வாழ்ந்த இடத்தை ஒரு வழியாக திருமாறன் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தந்தையின் கல்லறை எங்கே இருப்பது என்பதை அறியவும் சிக்கல் எழுந்துள்ளது. தாயும் இறந்து போனதால் அப்பாவை எங்கே அடக்கம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த திருமாறன், தனது தந்தை மலேசியாவில் ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் விவரத்தையும் அறிய முடிவு செய்துள்ளார்.
அப்போது மோகன ராவ் மற்றும் நாகப்பன் என இரண்டு பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மூலம் மலேசியாவில் தனது அப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த திருமாறன், இத்தனை தகவல்களையும் திரட்டி கொண்டு கடந்த சில தினங்கள் முன்பாக மலேசியா கிளம்பி சென்றுள்ளார்.
தந்தை இறந்து 55 ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறையை தேடி சென்ற மகன் திருமாறன், புதருக்குள் மங்கி கிடந்த தந்தையின் கல்லறையில் பெயர் மற்றும் விவரங்களை பார்த்து கதறி அழுதுள்ளார். தந்தையின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய திருமாறன், தந்தையின் கல்லறை முன்பு நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சொந்த ஊருக்கு திருமாறன் வந்த நிலையில், தந்தையின் கல்லறையை காண மலேசியா சென்ற செய்தி அதிகம் வைரலாகி இருந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட இந்த விஷயம் தொடர்பாக தனது சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Also Read | மகளை சுட்டுக் கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் வைத்து மறைக்க உதவிய தாய்.. உறைய வைக்கும் ஆணவக்கொலை.!