உலகத்தின் ரொம்ப வயசான மரம்..திகைச்சுப்போன ஆராய்ச்சியாளர்கள்.. யம்மாடி இவ்வளோ வயசா?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகவும் வயதான மரம் ஒன்றை சிலி நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொள்ளுத் தாத்தா
தென் அமெரிக்க நாடான சிலி-யில் மிகப் பழமையான மரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ள பிரம்மாண்ட காட்டில் இந்த மரம் இருக்கிறது. இது 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் வயது காரணமாக இந்த மரத்திற்கு கொள்ளு தாத்தா (great grandfather) எனவும் ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
மரத்தின் தண்டுப் பகுதியை ஆராய்ந்து அதன்மூலம் வயதை கண்டறிய முற்பட்ட ஆய்வாளர்கள் இந்த மரம் குறைந்தபட்சம் 5000 ஆண்டுகள் பழமையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
வயது
பொதுவாக, நாம் பள்ளிகளில் படித்ததை போலவே மரத்தின் வயதை கண்டறிய அதில் அமைந்துள்ள வளையங்களை கணக்கிடுவார்கள். இதற்காக ஒரு மீட்டர் அளவுள்ள தண்டுப் பகுதி ஆய்வாளர்களால் வெட்டி எடுக்கப்படும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மரத்தின் தண்டுப் பகுதியின் விட்டம் 4 மீட்டர் இருப்பதாக தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
அவர்கள் பிரித்தெடுத்த மாதிரி மற்றும் பிற வயதை கணக்கிடும் முறைகள் மூலமாக இந்த மரம் 5,484 ஆண்டுகள் பழமையானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஜோனாதன் பேரிச்சிவிச்," ஆய்வில் இந்த மரம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பதற்கே 80 சதவீத வாய்ப்பு உள்ளது. இம்மரம் இளமையாக இருக்கும் வாய்ப்பு 20 சதவீதம் மட்டுமே என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளளது" என்றார்.
உலகின் வயதான மரம்
சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமையான மரம், தற்போது உலகின் மிக வயதான மரமாக அறியப்படும் கலிபோர்னியாவில் உள்ள பைன் மரத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாதுகாக்கப்படும் இந்த மரம், 4,853 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலியின் அலர்ஸ் கோஸ்டெரோ தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த மரத்தினை சுற்றுலாவாசிகள் ஆர்வத்துடன் கண்டுவருகின்றனர். மேலும், பிரம்மாண்ட அடிப்பகுதியில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதாக தெரிவித்திருக்கிறது பூங்கா நிர்வாகம்.