திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...! தூரமா கொண்டுபோய் விட்டுட்டா எனக்கு வர தெரியாதா...? - 24 மணி நேரத்துக்குள்ள 'கெத்து' காட்டிய ரிவால்டோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வனப்பகுதியில் விடப்பட்ட யானை ஒன்று ஒரே இரவில் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில வருடங்களாக அடிக்கடி வந்து வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து குறும்பு செய்து வந்துள்ளது.
இந்த ரிவால்டோ யானைக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது, மேலும், வலது கண் பார்வைக் குறைபாடும் இருக்கிறதாம். இதன் காரணமாகவே இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் 12 ஆண்டு காலமாகத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கிறது.
யானைக்கு ஏற்பட்ட காயத்திற்கு கடந்த மே மாதம் முதல் வனத்துறை கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வனப்பகுதியில் விடக் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை வனத்துறையும் ஏற்று ரிவால்டோ யானையை காட்டுக்குள் விட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
நேற்றுமுன் தினம் (03-08-2021) அந்தக் குழு ரிவால்டோ யானையை லாரியில் ஏற்றி முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா என்ற அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. இந்த இடம் யானை சுற்றி திரிந்த குடியிருப்பு பகுதியில் இருந்து 40கி.மீ. தூரம் ஆகும்.
என்னதான் விலங்குகளுக்கு இது நல்லது என மனிதர்கள் நினைத்தாலும், அவைகளுக்கு பிடித்ததை மட்டுமே தேர்வு செய்யும் என்பதை நிரூபிக்கும் பொருட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட ரிவால்டோ 24 மணி நேரத்தில் 12 ஆண்டு காலமாகத் தான் வாழ்ந்துவந்த வாழைத்தோட்டம் நோக்கித் திரும்பியது.
சுமார் 40 கி.மீ தூரத்தை ரிவால்டோ வெறும் 24 மணி நேரம் பயணித்து தான் நடமாடி வந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யானையின் இந்த வருகை, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.